மக்களிடத்தில் ஆதரவு அற்ற கட்சிகளை ஒன்றிணைத்துக் கொண்டு நாங்கள் தொடர்ந்தும் பயணிப்பதா?  மன்னார் மாவட்ட ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளர் டானியல் வசந்தன் கேள்வி?

மக்களிடத்தில் ஆதரவு அற்ற கட்சிகளை ஒன்றிணைத்து கொண்டு நாங்கள் தொடர்ந்தும் பயணிப்பதா?அல்லது தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ இனி வருகின்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதா?என்பது குறித்து கட்சியின் உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டியுள்ளது என மன்னார் மாவட்ட ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளரும்,பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் செயலாளருமான டானியல் வசந்தன் தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் ரெலோ கட்சிக்காக பல்வேறு வகையிலும் உதவி புரிந்த கட்சியின் உறுப்பினர்களுடன் சந்திப்பும் மற்றும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை(24) மதியம் மன்னார் தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது.

இதன் போது தலைமை தாங்கி உரையாற்றுகையிலே மன்னார் மாவட்ட ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளரும்,பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் செயலாளருமான டானியல் வசந்தன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

எமது கட்சியின் தலைமைத்துவத்திற்கு எவ்வித பாதிப்புகளும் இன்றி மீண்டும் பாராளுமன்றம் அனுப்ப பல வழிகளிலும் உதவி புரிந்த தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் மன்னார் மாவட்ட உறுப்பினர்களுக்கு தலைவர் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் போட்டியிட்டது.அந்த 5 கட்சிகளில் 4 கட்சி வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர்.தமிழீழ விடுதலை இயக்கம் மட்டும் இத் தேர்தலில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பெற்றுக் கொண்டுள்ளது.

மக்களிடத்தில் ஆதரவு அற்ற கட்சிகளை ஒன்றிணைத்துக் கொண்டு நாங்கள் பயணிப்பதா?அல்லது தமிழீழ விடுதலை இயக்கம் இனி வருகின்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதா?,போன்ற விடயங்கள் குறித்து ஆலோசனைகளை உங்களிடம் முன் வைக்கின்றோம்.

நாங்கள் எதை நினைத்தாலும் மக்கள் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளனர்.ஐந்து கட்சிகளை ஒன்றிணைத்து பலத்துடன் போட்டி யிடுகின்றோம் என நாங்கள் நினைத்துக் கொண்டு இருக்கின்றோம்.

மக்கள் எமது கூட்டிற்கு ஆதரவு வழங்குவார்கள்.நாங்கள் தான் ஒற்றுமையாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.ஐந்து போராட்ட குழுக்கள் ஒன்றாக நிற்கின்றோம் ,நாங்கள் கடந்த காலங்களில் மக்களுக்காக ஆயுதம் ஏந்தி போராடியவர்கள்.எனவே எங்களுக்குத்தான் மக்களின் ஆதரவு இருக்கிறது என்று நாங்கள் எண்ணி இருந்தோம்.

அந்த எண்ணத்தில் மண்ணை போடுவது போல இலங்கை தமிழரசு கட்சி எவ்வாறு எம்மை விட்டு வெளியே சென்றார்களோ அவர்கள் நினைத்தது நடந்து விட்டது.

நாங்கள் தவறானவர்களாகவும்,அவர்கள் சரியான வர்களாகவும் காண்பித்து இத் தேர்தலில் வடக்கு கிழக்கில் அவர்கள் 8 ஆசனத்தை பெற்றுள்ளனர்.

உண்மையில் இது எமது அரசியல் இருப்பிற்கு ஒரு கேள்விக்குறியாகி உள்ளது.எனவே இனி வருகின்ற தேர்தல்களில் நாங்கள் தோற்போமாக இருந்தால் எமது கட்சியின் நிலை கேள்விக்குறியாகிவிடும்.

கடந்த காலங்களில் தமிழீழ விடுதலை இயக்கம் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளது.எனவே உங்களின் ஒத்துழைப்பை நாங்கள் தொடர்ந்தும் எதிர் பார்க்கிறோம்.எமது கட்சியின் உறுப்பினர்களை நம்பியே நாங்கள் அரசியலை முன்னெடுக்க உள்ளோம் என அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து உரை நிகழ்த்திய பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இத்தேர்தலில் தனது வெற்றிக்காக பாடுபட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றிகளை தெரிவித்ததோடு,கட்சி எதிர் காலத்தில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது