மின்கட்டண திருத்தம் ஊடாக இந்த ஆண்டில் 777 பில்லியன் ரூபா வருமானத்தை திரட்டிக் கொள்ள மின்சார சபை எதிர்பார்த்துள்ளது.
நடுத்தர வருமானம் பெறும் 50 இலட்சம் மின்பாவனையாளர்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்கட்டணத்தை அதிகரிக்கும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும்.
முறையாக செயற்படாவிட்டால் முட்டைக்கு நேர்ந்துள்ள கதியே மின்சாரத்திற்கு நேரிடும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் எவ்வித பரிந்துரைகளையும் மின்சாரத்துறை அமைச்சு முன்வைக்கவில்லை.
பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவின் சட்டத்திறகு அப்பாற்பட்ட வகையில் மின்கட்டணத்தை அதிகரிக்கும் யோசனையை மின்சாரத்துறை அமைச்சர் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளார்.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மென்மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பது நியாயமற்றது.
சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறைக்கான மின்கட்டணத்தை 125 சதவீதத்தாலும்,பெரு தொழிற்துறைக்கான மின்கட்டணத்தை 150 சதவீதத்தாலும். சுற்றுலாத்துறைக்கான மின்கட்டணத்தை 150 சதவீதத்தாலும் அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் (2022) ஆகஸ்ட் மாதம் மின்கட்டணம் நூற்றுக்கு 75 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டதால் மின்பாவனைக்கான கேள்வி நூற்றுக்கு 15 சதவீதத்தால் குறைவடைந்தது,சிறு மாற்றும் நடுத்தர தொழிற்துறை பாதிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில் மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் மின்பாவனைக்கான கேள்வி முழுமையாக குறைவடையும்.
நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆணைக்குழுவிற்கு முரணாக மின்கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
கடந்த ஆகஸட் மாதம் 31ஆம் திகதி மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டது. ‘இதனால் இலங்கை மின்சார சபை 220 பில்லியன் ரூபா இலாபம் அடைந்து. இலாபத்தை காட்டிலும் நட்டம் அதிகமாக உள்ளது என மின்சார சபை குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்து இவ்வருடம் 777 பில்லியன் வருமானத்தை பெற்றுக் கொள்ள இலங்கை மின்சார சபை உத்தேசித்துள்ளது.
இந்த இலாபத்தில் 100 பில்லியன் ரூபாவை நடுத்தர வருமானம் பெறும் 50 இலட்ச மின்பாவனையாளர்களிடமிருந்து அறவிட எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
குறைந்த மின் அலகுகளை பாவிக்கும் மின்பாவனையாளர்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்கட்டணத்தை திருத்தம் செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.
முட்டை பிரச்சினை நாட்டில் பெரும் பிரச்சினையாகவுள்ளது. முட்டை விலை அதிகரிப்பை தொடர்ந்து முட்டை மாபியாக்கள் முட்டைகளை பதுக்கி அதிக விலைக்கு விற்கிறார்கள், முட்டைக்கு கட்டுப்பாட்டு விலையை கூட அரசாங்கத்தினால் நியமிக்க முடியாத நிலை காணப்படுகிறது. பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் சட்டத்திற்கு அமைய செயற்படாவிட்டால் முட்டைக்கு ஏற்பட்டுள்ள கதியே மின்சாரத்திற்கு ஏற்படும் என்றார்.