மக்கள் விடுதலை முன்னணி எழுத்தாணை மனு தாக்கல்

கெரவலபிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்கு சொந்தமான பங்குகளில் 40 வீதமானவற்றை அமெரிக்காவின் நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை வலுவிழக்க செய்யுமாறு கோரி, மக்கள் விடுதலை முன்னணியின் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் வசந்த சமரசிங்க ஆகியோரால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, அமைச்சரவை, இலங்கை மின்சார சபை, வெஸ்ற் கோர்ஸ்ற் பவர் தனியார் நிறுவனம், லக்தனவி நிறுவனம், இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உள்ளிட்ட 43 தரப்பினர் மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அமைச்சரவையால் கடந்த செப்டம்பர் மாதம் 06 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை வலுவிழக்க செய்யுமாறும் தமது மனு மீதான விசாரணையை நிறைவு செய்யும் வரை அமைச்சரவையின் தீர்மானம் குறித்து நடவடிக்கை எடுப்பதை தடுத்து, இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.