மடு கோயில் மோட்டை விவசாய காணியை ஒரு சிலரின் தூண்டுதலுடன் அபகரிக்க முயற்சி – மக்கள் போராட்டம்

மடு திருத்தலத்திற்கு உரிய  கோயில் மேட்டை விவசாய காணி அபகரிப்பு செய்யப்பட்டு வருகின்றமையை கண்டித்து மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பெரிய பண்டிவிரிச்சான் மற்றும் சின்னப் பண்டிவிரிச்சான் கிராம மக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றைய தினம் (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

மன்னார் பஜார் பகுதியில் அமைதியான முறையில் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

நீண்ட காலமாக மடு திருத்தலத்திற்கு சொந்தமாக காணப்பட்ட குறித்த காணியை சிலரின் தூண்டுதலுக்கு அமைவாக அபகரிக்கப்பட்டு வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் குறித்த பகுதியில் இந்து மற்றும் கிறிஸ்தவ மக்கள் ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்துள்ள நிலையில்,தற்போது ஒரு சில தீய சக்திகளால் மத பிரச்சினையை தோற்றுவிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மடு திருத்தலத்திற்கான கோயில் மோட்டை காணியானது பல வருடங்களை கொண்டுள்ள நிலையில்,மடு ஆலய நிர்வாகத்தினால் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையிலே குறித்த காணி தொடர்பாக சில விஷமிகளால் மத பிரச்சனைகளை தூண்டி, குறித்த காணியை அபகரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

குறித்த கிராமங்களில் ஏழை விவசாயிகள் இருக்கின்ற நிலையில் ஒரு குழுவினர் தாங்கள் ஏழை விவசாயிகள் என கூறிக்கொண்டு குறித்த காணியை அபகரிக்க முயற்சி செய்து வருகின்றதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பஜார் பகுதியில் இருந்து மாவட்டச் செயலகம் வரை ஊர்வலமாக சென்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்தனர்.

பின்னர் வட மாகாணத்தின் புதிய ஆளுநருக்கு எழுதப்பட்ட மகஜர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெலிடம் கையளிக்கப்பட்டதோடு,துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.