மட்டக்களப்பு கடற்பகுதியில் நீண்ட நாட்களாக நிற்கும் கப்பல் தொடர்பில் வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு ஒரு வாரத்திற்கும் மேலாக தரித்து நிற்கும் கப்பல் கடலில் இருந்து மணல் அள்ளப்பட்டு வரும் நிலையில், மற்றொரு கப்பலில் இரவு நேரங்களில் மணல் கடத்தப்படுவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர். அரசு அதிகாரிகளை சீருடை அணிந்தவர்கள் ஆயுதங்களுடன் திருப்பி அனுப்பினர். யார் பதில்களை வழங்க முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தனது டுவிற்றர் பதிவில் கேள்வியெழுப்பியிருந்தார்.
எனினும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து பங்களதேஷிற்கு பயணித்த கப்பலில் ஏற்பட்ட எரிபொருள் குறைவு காரணமாகவே, குறித்த கப்பல் மட்டக்களப்பை அண்மித்த கடலில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த கப்பலுக்கு தேவையான எரிபொருள், திருகோணமலையிலுள்ள எரிபொருள் விநியோகிக்கும் கப்பலொன்றிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, குறித்த கப்பல் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.