மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மா. தயாபரனின் தரம் கெட்ட வேலை அப்பாவி மக்களை பாதிக்கக் கூடியதாக இருக்கின்றதாகவும் இலவச அமரர் ஊர்தி சேவைக்கு தடையாக உள்ளார் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்
GK அறக்கட்டளையின் இலவச அமரர் ஊர்தியின் பாதுகாப்பு கருதி மாநகர சபையின் வாகனத் தரிப்பிடத்தில் கடந்த இரண்டு வருடத்திற்கும் மேலாக மாநகர சபையின் 38 உறுப்பினர்களின் ஏகோபித்த முடிவின் பிரகாரம் ஊர்தியை நிறுத்தி வைத்தோம்.
தயாபரன் ஆணையாளராக சில மாதங்களிற்கு முன்பு வந்ததின் பிற்பாடு ஊர்தியை தரிப்பிடத்தில் நிற்பாட்டுவதற்கு தடை விதித்தார். ஆணையாளருக்கும் முதல்வர் மற்றும் உறுப்பினர்களுக்கும் இடைப்பட்ட அதிகாரப் போட்டியில் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் மீண்டும் இலவச ஊர்தி வாகனத்தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டது.
ஆனால் இன்று ஆணையாளர் தயாபரனின் அடாவடி அப்பாவி மக்களை பாதிக்கக் கூடியதாக இருக்கின்றது. தற்போது ஒரு ஏழை இறந்து அந்த பூதவுடல் இந்த அமரர் ஊர்தியில் ஏற்ற வேண்டுமாக இருந்தால் எப்படி இந்த வாகனத்தை வெளியில் எடுப்பது என்பது பற்றி சிந்தக்க வேண்டும்.
இந்த ஆணையாளர் மக்களை நேசிக்கின்றாரா அல்லது சிந்திக்கும் இடத்தில் இவருக்கு கோளாறா என்பதை விளங்கிக் கொள்ள முடியாமல் உள்ளது.
இந்த ஊர்தி இதுவரை 1200 இற்கு மேற்பட்ட ஏழைகளின் பூதவுடல்களை மட்டக்களப்பு மாவட்டம் தாண்டி கிழக்கு மாகாணம் முழுவதும் ஏற்றி இறக்கியிருக்கிறது
கோவிந்தன் ஜனா கருணாகரம் பா. உ,
தலைவர், GK அறக்கட்டளை .