மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கையிடம் விடுத்துள்ள வேண்டுகோள்

மதரீதியான அடிப்படைவாதம் மற்றும் இனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுவோரை இருவருடகாலத்திற்கு விசாரணைகளின்றித் தடுத்துவைக்கக்கூடிய வகையில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஆணை உடனடியாக இரத்துச்செய்யப்பட வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

‘இலங்கை ‘மத ஒருமைப்பாடின்மைக்கு வழிவகுக்கும் ஆணை சிறுபான்மை சமூகத்தை அச்சுறுத்துகின்றது’ என்ற தலைப்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

மதரீதியான அடிப்படைவாதம் மற்றும் இனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுவோரை இருவருடகாலத்திற்கு விசாரணைகளின்றித் தடுத்துவைக்கக்கூடிய வகையில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஆணை உடனடியாக இரத்துச்செய்யப்பட வேண்டும். கடந்த 9 ஆம் திகதியிடப்பட்ட பயங்கரவாதத்தடைச்சட்ட விதிமுறைகள் தொடர்பான 2021 ஆம் ஆண்டு முதலாம் இலக்க வர்த்தமானி அறிவித்தலானது மிகவும் மோசமான பயங்கரவாதத்தடைச்சட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இந்த அறிவித்தலானது இன, மத சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளுக்குப் புறம்பாக அவர்களை இலகுவாக இலக்குவைக்கக்கூடிய வாய்ப்பை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு வழங்குவதாக அமைந்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிசெய்தல் மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றை வலுப்படுத்தும் வகையிலான தீர்மானமொன்றை நிறைவேற்றுவது குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆராய்ந்து வருகிறது.

இந்நிலையில் இலங்கையானது மோசமான சட்டங்கள் அடங்கிய களஞ்சியத்திற்குள் தற்போது புதிய சட்டமொன்றைச் சேர்த்திருக்கிறது. அது சித்திரவதைகளுக்கு உட்படல் மற்றும் விசாரணைகளின்றி நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்படல் ஆகிய ஆபத்துக்களில் இன, மத சிறுபான்மையினரைத் தள்ளியிருக்கிறது. மிகமோசமான பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இரத்துச்செய்து ஐக்கிய நாடுகள் சபையின் கரிசனைகளை நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக, ராஜபக்ஷ அரசாங்கம் ஒரு பழிவாங்கல் செயற்பாட்டுடன் அதனை எதிர்கொள்கின்றது.