இலங்கையின் உடன்பாடின்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்தின் ஊடாக உருவாக்கப்பட்டுள்ள ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையானது இலங்கை மக்களுக்கு எவ்வகையிலும் பயனளிக்காது என்பதுடன் அது சமூகங்களுக்கு இடையில் பிளவுகள் ஏற்படுவதற்கும் துருவமயப்படுவதற்கும் வழிவகுக்கும்.
இந்நடவடிக்கை நல்லிணக்கத்தை உறுதிசெய்வதற்கான முயற்சிகளில் இடையூறுகளைத் தோற்றுவிப்பதுடன் மாத்திரமன்றி, கடந்தகால வடுக்கள் மீண்டும் கிளறப்படுவதற்கும் காரணமாக அமையும்.
ஆகவே ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையை நாங்கள் முழுமையாக நிராகரிக்கின்றோம் என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அறிவித்தார்.
மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த கட்டமைப்பும் நிதிப்பற்றாக்குறைக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், இந்த நடவடிக்கை உறுப்புநாடுகளின் நிதி அநாவசியமான முறையில் செலவிடப்படுவதற்கே வழிவகுக்கும் என்றும் அவர் பேரவையில் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமான நிலையில், பேரவையில் நேற்றைய தினம் இலங்கை சார்பில் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உரையாற்றினார். தனது உரையில் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டிய அவர், மேலும் கூறியதாவது:
மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்குமான செயற்திட்டத்தில் இலங்கை செயற்திறன்வாய்ந்த உறுப்பினராக இருந்துவருகின்றது.
எமது அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள், ஜனநாயக முறையின் ஊடாகத் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்தின் கட்டமைப்புக்கள் மூலம் செயற்திறன்மிக்கவகையில் மேம்படுத்தப்பட்டிருப்பதுடன் சுயாதீன நீதிமன்றக்கட்டமைப்பின் ஊடாக வலுப்படுத்தப்பட்டுள்ளன. பயங்கரவாதத்தின் விளைவாகப் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்கவேண்டியேற்பட்ட போதிலும், நாம் நாட்டில் சமாதானத்தையும் பாதுகாப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் மீளுறுதிப்படுத்தியிருக்கின்றோம்.
நாட்டின் ஜனநாயக ரீதியான பாரம்பரியம் மற்றும் சுயாதீனக்கட்டமைப்புக்கள் ஊடாக சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட கால இடைவெளியில் சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தல்கள் நடாத்தப்படுகின்றன. அதேவேளை போரின் பின்னரான மீட்சியை முன்னிறுத்தி நாம் மேற்கொண்டிருந்த முக்கிய நடவடிக்கைகளை எதிர்வருங்காலங்களில் மேலும் மேம்படுத்துவதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம். அதன்படி நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் சமூகநீதி ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கென உள்ளகக்கட்டமைப்புக்களை ஸ்தாபித்திருக்கின்றோம்.
இந்தப் பேரவையின் ஊடாக நாம் பரஸ்பர நன்மையளிக்கும் வகையிலான காலவரையறையுடைய மூன்று மதிப்பீடுகளைப் பூர்த்திசெய்திருப்பதுடன் மனித உரிமைகள் பேரவையுடன் தொடர்புடைய கட்டமைப்புக்களுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுத்திருக்கின்றோம். அதுமாத்திரமன்றி விசேட ஆணை வழங்கப்பட்ட அதிகாரிகளின் செயற்பாடுகளை வரவேற்று ஏற்றுக்கொண்டிருப்பதுடன் உள்ளக மற்றும் சர்வதேசத்தரப்புக்களுடன் நேரடியானதும் வெளிப்படையானதுமான கலந்துரையாடல்களையும் மேற்கொண்டிருக்கின்றோம்.
அதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஊடாக வழங்கப்பட்ட செயற்பாட்டு ரீதியான ஒத்துழைப்புக்கள், இயலுமையை மேம்படுத்துவதற்கான செயற்திட்டங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் நாம் நன்மையடைந்திருக்கின்றோம். மேலும் நல்லிணக்கத்தை உறுதிசெய்வதை முன்னிறுத்திய எமது உள்ளகப்பொறிமுறைக்கான ஒத்துழைப்புக்களை வழங்குவதிலும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதிலும் இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் குழுவினால் வழங்கப்பட்டுவரும் பங்களிப்பை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகின்றோம். இத்தகைய ஒத்துழைப்புக் கலந்துரையாடல்கள் மற்றும் சர்வதேசக்கடப்பாடுகளைப் பூர்த்திசெய்யும் வகையிலான எமது உள்ளகப்பொறிமுறை ஆகியவற்றின் ஊடாக மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன் மேம்படுத்தப்படுவதையும் இன, மத, அரசியல் அடையாளங்களுக்கு அப்பால் அனைத்து மக்களுக்குமான சமூகநீதி நிலைநாட்டப்படுவதையும் நாம் தொடர்ந்து உறுதிசெய்வோம்.
கொவிட் – 19 வைரஸ் தொற்றுப்பரவலினால் பொருளாதார ரீதியில் ஏற்பட்ட பின்னடைவிற்கு மத்தியிலும், அபிவிருத்திக்கான மக்களின் உரிமையை நாம் உறுதிசெய்துவருகின்றோம். நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பில் வெளியிடப்பட்ட அண்மைய அறிக்கையின்படி, உலகளாவிய தரப்படுத்தலில் இலங்கை 7 நிலைகளால் முன்னேற்றமடைந்திருக்கின்றது. இவ்விடயத்தில் அடிமட்டம் வரையில் அணுகுவதற்கான தமது இயலுமையின் மூலம் சிவில் சமூக அமைப்புக்களால் வழங்கப்பட்ட பங்களிப்பினைப் நாம் பெரிதும் வரவேற்கின்றோம்.
சர்வதேச சமூகத்தின் மத்தியில் அபிவிருத்தியடைந்துவரும் ஓர் நாடு என்றவகையில், வைரஸ் தொற்றுப்பரவல் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கான எமது முயற்சிகளைப் பாதிக்கக்கூடியவகையில் ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள மோதல் போன்றவற்றின் விளைவுகளால் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு நாம் தயாராகின்றோம்.
பேரவையின் தீர்மானங்களின் பிரகாரம் நாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான மீளாய்வு தற்போது மேற்கொள்ளப்படுகின்றது. முன்னைய ஆணைக்குழுவின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த நம்பகத்தன்மை தொடர்பான இடைவெளியிலிருந்து பேரவை வெற்றிகரமாக மீட்சியடைந்திருக்கின்றதா என்பதன் பிரதிபலிப்பையே நாம் வெளிக்காட்டுவோம்.
மனித உரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்கான பல்பரிமாணக் கட்டமைப்பு கடந்த தசாப்தகாலத்தில் செயற்திறனான வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தீர்மானமான 60ஃ251 மற்றும் மனித உரிமைகள் பேரவையின் தீர்மாங்களான 5ஃ1 மற்றும் 5ஃ2 ஆகியன பேரவையின் செயற்பாடுகள் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாகவும் நியாயமானதும் பக்கச்சார்பற்றதாகவும் காணப்படவேண்டும் என்று வலியுறுத்தியிருப்பதுடன் அவை நியாயமான கலந்துரையாடல்களுக்கும் வாய்ப்பளித்துள்ளன.
இலங்கையின் உடன்பாடின்றி (அனுமதியின்றி) பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட 46ஃ1 தீர்மானத்திற்கு ஆதரவாகக் கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வாக்களிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை மனித உரிமைகள் பேரவையை அரசியல்மயப்படுத்தியிருப்பதுடன் துருவமயப்படுத்தியிருக்கின்றது. இந்தத் தீர்மானத்தின் 6 ஆவது பந்தியில் பெருமளவான நாடுகள் எதிர்ப்பை வெளிப்படுத்திய ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறை தொடர்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள் உள்ளக மற்றும் சர்வதேச ரீதியில் அமைதியின்மையைத் தோற்றுவிப்பதுடன் நல்லிணக்கத்தை உறுதிசெய்வதற்கான முயற்சிகளிலும் இடையூறுகளை ஏற்படுத்தும். அதுமாத்திரமன்றி அவை கடந்தகால வடுக்கள் மீண்டும் கிளறப்படுவதற்கும் சமூகங்கள் துருமயப்படுத்தப்படுவதற்கும் வழிவகுக்கும்.
மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் அரசாங்கங்களுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கக்கூடிய சாத்திய வழிமுறைகள் தொடர்பான ஆணையை உறுப்புநாடுகள் தயாரித்துள்ளன. அதற்கமைய பேரவையினால் முன்னெடுக்கப்பட்ட நன்மையளிக்கக்கூடியவாறான செயற்திட்டங்களிலும் பாதுகாப்பானதும் கௌரவமானதுமான மக்கள் வாழ்க்கையை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளிலும் இலங்கை மிகுந்த செயற்திறனுடனும் துடிப்புடனும் பங்கேற்றிருந்தது. இருப்பினும் சமூகங்களில் பிளவுகளை ஏற்படுத்துவதுடன் துருவமயப்படுத்தக்கூடியவாறானதும் எவ்வித பயனையும் தராததுமான நடவடிக்கைளை நாங்கள் முழுமையாக நிராகரிக்கின்றோம்.
பயங்கரவாதத்தைக் கையாண்டபோது உலகின் ஏனைய நாடுகளைப்போன்று நாமும் மனித உரிமைகளுக்கும் தேசிய பாதுகாப்பிற்கும் இடையில் சமநிலையைப்பேண முயன்றோம். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான சட்டங்கள் நபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அதேவேளை, கருத்துச்சுதந்திரம் உள்ளிட்ட ஜனநாயக சுதந்திரத்திற்குத் தடையேற்படுத்தாத வகையில் அமையவேண்டும் என்பதை இலங்கை ஏற்றுக்கொள்கின்றது. அதற்கமைவாக அண்மையில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான முன்மொழிவை நான் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தேன்.
இவ்வாறானதொரு பின்னணியில் 46ஃ1 தீர்மானத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்டுள்ள ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையானது இலங்கை மக்களுக்கு எவ்வகையிலும் பயனளிக்காது என்ற எமது நிலைப்பாட்டை மீளவலியுறுத்துவதுடன் அந்நடவடிக்கை சமூகங்களைத் துருவமயப்படுத்துவதுடன் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமாதானம் ஆகியவற்றிலும் தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம். மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த கட்டமைப்பும் நிதிப்பற்றாக்குறைக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், இந்த நடவடிக்கை உறுப்புநாடுகளின் நிதி அநாவசியமான முறையில் செலவிடப்படுவதற்கே வழிவகுக்கும் என்று குறிப்பட்டார்.