இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை இலக்காக கொண்டு இலங்கை அரசாங்கத்தினால் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகள் மற்றும் முன்னகர்வுகள் குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதி அலுவலக சிரேஷ்ட உறுப்பினர் தூதுவர் மிட்செல் ஜி கொஷக் அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் இரு தரப்பு நட்புறவு வேலைத்திட்டங்கள் குறித்தும் அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்க தெளிவுபடுத்தியுள்ளர்.
அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்கவிற்கும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதி அலுவலக சிரேஷ்ட உறுப்பினர் தூதுவர் மிட்செல் ஜி கொஷக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கடந்த வியாழக்கிழமை, இணையவழி கலந்துரையாடலாக இந்த உரையாடல் இடம்பெற்றிருந்த நிலையில், இலங்கையின் நல்லிணக்க பொறிமுறை, மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலான முன்னகர்வுகள் குறித்து இலங்கையிடம் கேட்டறியப்பட்டுள்ளது.
யுத்தத்திற்கு பின்னரான இலங்கையின் தேசிய நல்லிணக்க வேலைத்திட்டங்கள், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் பொறிமுறையின் முன்னகர்வுகள் குறித்தும், நல்லிணக்கத்தை இலக்காக கொண்ட இலங்கையின் தற்போதைய நகர்வுகளின் முன்னேற்றம் மற்றும் அதற்கான முயற்சிகள் குறித்து உலகளாவிய குற்றவியல் நீதி அலுவலக சிரேஷ்ட உறுப்பினர் தூதுவர் மிட்செல் ஜி கொஷக் கேட்டறிந்துகொண்டுள்ளார்.
அதேபோல் நாட்டின் மனித உரிமைகளை பலப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது உலகளாவிய குற்றவியல் நீதி அலுவலக சிரேஷ்ட உறுப்பினர் தூதுவர் மிட்செல் ஜி கொஷக்கும் அவரது குழுவினரும் கவனம் செலுத்தியுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டங்கள், தற்போதுள்ள கொவிட் நெருக்கடி நிலைமைகளில் அரசாங்கம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் நிதி நெருக்கடி நிலைமைகள் குறித்து இலங்கையின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ள அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்க, நல்லிணக்கத்தையும் மனித உரிமைகளை பலப்படுத்தும் இலங்கையின் தற்போதைய முயற்சிகளின் முன்னேற்றகரமான சில வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும், புதிய அரசியல் அமைப்பு உருவாக்க முயற்சிகள், பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தங்களை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் குறித்தும் தெளிவுபடுத்தியுள்ளார்.
அத்துடன் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான நெருக்கமான நட்புறவை முன்னெடுத்து செல்வது குறித்தும் அவர் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.