மனித உரிமை உயர்ஸ்தானிகரின் உறுதியான அறிக்கைக்கு தமிழ் தரப்பின் ஒருமித்த நிலைப்பாடே முக்கிய காரணம்- சுரேந்திரன் ரெலோ

இன்று 12 செப்டம்பர் மாதம் 2022 ஆரம்பித்துள்ள ஐநா மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரில் மனித உரிமை உயர்ஸ்தானிகரின் இலங்கை மீதான உத்தியோக பூர்வ வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டது.

இவ்வறிக்கையில் கூட்டாக தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து கடந்த செப்டெம்பர் 2021ல் இருந்து முன்வைத்து வந்த அநேக விடயங்கள் உள்வாங்கப் பட்டிருந்தன.

உதாரணமாக முக்கிய பிரச்சினைகளாக நாங்கள் சுட்டிக் காட்டி வந்த

– அரச நிறுவனங்கள் திணைக்களங்கள் உட்பட நிர்வாகங்களை இராணுவ மயப்படுத்தல் குறிப்பாக வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் அரச நிர்வாகம், சட்ட ஒழுங்கு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் அதிகமாக ராணுவமே ஈடுபடுவது

– கட்டுமீறிய இராணுவச் செலவீனங்கள், நிதி ஒதுக்கீடுகள்

– குறிப்பாக வடக்கு கிழக்கில் இருக்கும் அதீீத ராணுவப் பிரசன்னத்தை குறைத்தல்

– காணி அபகரிப்பை நிறுத்தி இராணுவ வசமுள்ள காணிகளை விடுவித்தல்

– மொழி மதரீதியான பெரும்பான்மை சிந்தனையோடு செயல் ஆற்றுதல், ஆதிக்க சிந்தனையோடு எழுப்பப்படும் மத சின்னங்கள்

– குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் நினைவேந்தல் முயற்சிகளில் ஈடுபட்டவர்கள், புனர் வாழ்வழிக்கப் பட்ட முன்னாள் போராளிகள் ஆகியோரை, புலனாய்வுப் பிரிவுகள், இராணுவம் மற்றும் பொலிஸ் கண்காணிப்பு, அச்சுறுத்தல், துன்புறுத்தல் பற்றிய
விடயங்களுடன் மேலும் பல விடயங்களை நாம் அறிக்கையிட்டு இருந்ததை உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில் உள் வாங்கியுள்ளார். மிக விபரமான உறுதியான அறிக்கையாக அமைந்துள்ளமை வரவேற்கத் தக்கது.

ஒருமித்த நிலையில் தமிழ் தரப்பினர் அறிக்கை சமர்ப்பித்ததை ஐ நா கவனத்தில் கொண்டுள்ளதை நாங்கள் அவதானிக்க வேண்டும். நாம் எழுதிய கடிதங்கள் ஐநா வினால் கரிசனை கொள்ளப்பட மாட்டாது என்றும் ஒரு சிலருடைய கையெழுத்துக்களை மாத்திரம் ஐநா கரிசனை கொள்ளும் என்றும் சிலர் சொல்லிவந்த கருத்தினை இவ்வறிக்கை பொய்ப்பித்துக் காட்டியுள்ளது.

ஐநா என்பது ஒருசிலருக்கோ, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கோ மாத்திரம் சொந்தமானது அல்ல. அது பாதிக்கப்பட்டவர்கள் உடைய குரலுக்கே செவிசாய்க்கும் என்பதை இவ்வறிக்கை எடுத்துக் காட்டியுள்ளது.

இப்போது மனித உரிமைப் பேரவையில் உள்ள அங்கத்துவ நாடுகள் சர்வதேச நீதிமன்றத்திற்கு குற்றவாளிகளைப் பாரப்படுத்த வேண்டும் என்று அனைத்து தமிழ் தரப்பினரும் ஒருமித்த ஒன்றிணைந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை, மனித உரிமைப் பேரவையில் உள்ள அங்கத்துவ நாடுகள் கொண்டுவர இருக்கும் பிரேரணையில், உள் வாங்க வைக்கும் முயற்சிக்கு தமிழ் மக்கள் ஒருமித்த நிலையில் தொடர்ந்தும் செயல்படுவது வலுச் சேர்க்கும்.

உயர்ஸ்தானிகரின் அறிக்கை மனித உரிமைப் பேரவையில் கொண்டு வரப்பட இருக்கும் பிரேரணையில் பெரும் செல்வாக்கு செலுத்தும்.

நாம் கோரி நிற்கும் நீதியை பெற்றுக் கொள்ள, கோரிக்கை முன்வைத்த அனைத்து தரப்பினரும் தொடர்ந்தும் ஒருமித்து செயலாற்றுவது அவசியம்.