மறைந்த ரெலோ இயக்கத் தலைவர் சிறீ சபாரத்தினத்தின் மூத்த சகோதரருக்கு யாழில் உணர்வுபூர்வ அஞ்சலி

ஈழ விடுதலை போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரும், தன் இறுதி மூச்சு வரை உறுதியாக தமிழ் இன விடுதலையை நேசித்தவரும், பலமுறை சிறை சென்று சித்திரவதைகளுக்கு ஆளாகிச் சிறை மீண்டவருமான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) மறைந்த தலைவர் சிறீ சபாரத்தினத்தின் மூத்த சகோதரர் டாக்டர்.சுந்தரம்பிள்ளை கந்தசாமி(கந்தா)கடந்த 9 ஆம் திகதி புதன்கிழமை சுகவீனம் காரணமாக இந்தியாவின் சென்னையில் காலமாகியிருந்தார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை(13.3.2022) சென்னையில் நடைபெற்றது.

இந்நிலையில் மறைந்த தலைவர் சிறீ சபாரத்தினம் மற்றும் அவரது மூத்த சகோதரரான அமரர் சு.கந்தசாமி (கந்தா) ஆகியோரின் இல்லம் அமைந்துள்ள இடமான யாழ்.கல்வியங்காடு செங்குந்தா இந்துக் கல்லூரி மைதானத்திற்கு அருகில் இன்று முற்பகல்-11 மணிக்கு அஞ்சலி நிகழ்வொன்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் மெளன வணக்கம், ஈகைச் சுடரேற்றல், உருவப் படத்திற்கு மலர் மாலைகள் அணிவித்து மலரஞ்சலி,மற்றும் அஞ்சலி உரைகளும் நடைபெற்றன.

மேற்படி அஞ்சலி நிகழ்வில் வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சரும், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன், பிரபல சட்டத்தரணி ஏ.இராஜரட்ணம் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி உரைகள் நிகழ்த்தினர்.

அஞ்சலி நிகழ்வில் ரெலோவின் மூத்த போராளிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை, மறைந்த தலைவர் சிறீ சபாரத்தினம் மற்றும் அவரது சகோதரர் அமரர் சு.கந்தசாமி(கந்தா) ஆகியோரின் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள உறவினர்கள், ஊரவர்களின் வேண்டுகோளின் பேரில் விந்தன் கனகரட்ணம், விஸ்வநாதன் விஸ்வா மற்றும் கஜேந்தினி, காந்தரூபன், இராசதுரை, நடராசா ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் குறித்த அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.