மலையக சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் -ரெலோ தலைவர் செல்வம் எம்பி வலியுறுத்தல்

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் (Rishad Bathiudeen) வீட்டில் வேலை செய்து வந்த 16 வயது ஹிசாலினி எனும் மலையகத்தை சேர்ந்த சிறுமி அண்மையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் மரணம் அடைந்திருந்தார்.

அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றார்கள். அதே வேளை இந்த மரணம் தொடர்பான விசாரணைகள் மந்த கதியில் செல்வதாக பொது மக்கள் குற்றம் சுற்றம் சாட்டுகின்றனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்,

“மலையகத்தை சேர்ந்த 16 வயதான சிறுமி ஹிசாலினியின் மரணத்தில் பலவாறான நெஞ்சை உலுக்கும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரியும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பெண்கள் அமைப்புகள் பொது அமைப்புகள் என்று ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வரும் இந்த நேரத்தில், அரசாங்கம் இனியும் மௌனம் காக்கக் கூடாது.

குடும்பச் சூழ்நிலை காரணமாக வீட்டு வேலையில் இருந்த சிறுமியின் மரணத்தில் உள்ள மர்மங்கள் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும். அதே நேரம் இந்த மன்னிக்க முடியாத குற்றத்தை இழைத்தவர்கள் எந்த உயர்ந்த நிலைகளில் இருந்தாலும் அவர்கள் உரிய முறையில் விசாரிக்கப் பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். அப்பொழுது தான் இந்த நாட்டில் சிறுவர்கள் பெண்களுக்கு எதிராக நடக்கின்ற குற்றச் செயல்களை தடுக்க முடியும்” என்றார்.