மலையக மக்களுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்..! இந்தியாவில் வெளியிடப்பட்ட ஞாபகார்த்த முத்திரை!

இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டும் அவர்களுக்கான அங்கீகாரத்தை உறுதிப்படுத்தும் வகையிலுமான ஞாபகார்த்த முத்திரை வெளியிடப்பட்டுள்ளது.

புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையின் பேரிலும்,

தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் கே.அண்ணாமலையின் ஏற்பாட்டிலும் இன்று (30) மலையக மக்களை கௌரவிக்கும் வகையில் இந்திய தபால்துறை அமைச்சினூடாக இந்த நினைவுத் தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், இந்நிகழ்வின்போது, பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நடாவால் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கு நினைவுத் தபால்தலை கையளிக்கப்பட்டது.

இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கைக்கு இடம்பெயர்ந்தமை தொடர்பான நூற்றுக்கணக்கான ஆவணங்கள், கோப்புகள் பரிசீலிக்கப்பட்டு, உரிய வரலாற்றுச் சுவடுகளோடு இந்த முத்திரையை வெளியிடுவதற்கு இந்திய தபால்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

இதன் மூலம் இலங்கைக்கு இடம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்பிலான வரலாறு இந்தியர்களுக்கு எளிதில் எடுத்துரைக்கப்படுகிறது.

இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்து பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், சீனா, ஈரான், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பூட்டான் உள்ளிட்ட 210க்கும் மேற்பட்ட நாடுகளில் கிட்டத்தட்ட 32,285,425 இந்திய வம்சாவளி மக்கள் வசித்து வருகின்ற போதிலும், இலங்கையில் 200 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்காக முத்திரை வெளியிடப்பட்டுள்ளமை மலையக மக்களுக்கு அளிக்கப்படும் மரியாதையாகவே பார்க்கப்படுகிறது.