மஹிந்தவுக்கு ஏற்பட்ட கதியே ரணிலுக்கும் – “கோட்டா கோ கம” ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கைகளை முன்வைத்து எச்சரிக்கை !

காலி முகத்திடல் ‘கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் முதன் முறையாக தங்களின் கோரிக்கைகளை பகிரங்கப்படுத்தியுள்ளனர்.

காலி முகத்திடல் தாய்நாடு பிரஜைகளின் வலியுறுத்தல் யோசனை என சமூக நீதிக்கான இளைஞர் அமைப்பு குறித்த கோரிக்கைக்கு பெயரிட்டுள்ளனர்.

பல்வேறு காரணிகளை அடிப்படையாகக்கொண்டு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றுள்ளார்.

இவரது அரசியல் வரலாற்றை நன்கு அறிவோம். முன்வைத்துள்ள கோரிக்கைகளை விரைவாக செயற்படுத்த வேண்டும் அதனை விடுத்து கடந்த காலங்களில் செயற்பட்டதை போன்று செயற்பட்டால் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஏற்பட்ட கதியே ஏற்படும் எனவும் குறிப்பிட்டனர்.

காலி முகத்திடல் ‘கோட்டா கோ கம’ போராட்டக்களத்தில் நேற்று ஊடகசந்திப்பை நடத்தி தங்களின் கோரிக்கைகளை பகிரங்கப்படுத்தினர்.

குறித்த கோரிக்கையில் பல பிரதான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் என்பது குறித்த கோரிக்கையில் பிரதானமாக உள்ளது.

வரையறுக்கப்பட்ட காலத்திற்கு இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபித்தலுடன் அமைச்சரவையின் எண்ணிக்கையை குறைந்தப்பட்சம் 15 ஆக மட்டுப்படுத்தல் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் வரப்பிரசாதங்களை மீளாய்வு செய்தல் இரண்டாவது கோரிக்கையாகும்.

அரசியலமைப்பில் தேவையான திருத்தங்களை விரைவாக முன்னெடுத்தல், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை முழுமையாக இரத்து செய்து அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தை இரண்டு மாத காலத்திற்குள் அமுல்படுத்தல், 06 மாத காலத்திற்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்தல் முக்கியமானதாகும்.

பொருளாதார நெருக்கடியை விரைவாக முகாமைத்துவம் செய்தல், சொத்து விசாரணை மற்றும் வெளிப்படுத்தல் ,ராஜபக்ஷர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளினதும், அவர்களின் உறவினர்களின் சொத்து விபரங்கள் பகிரங்கப்படுத்தல்,வெளிநாடுகளில் உள்ள சொத்துக்கள் தொடர்பான விபரங்களை பகிரங்கப்படுத்தல்,

சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தல்,வாழும் உரிமையை அடிப்படை உரிமையாக அரசியலமைப்பிற்குள் உள்ளடக்குதல் மற்றும் இடைக்கால அரசாங்கத்தை தொடர்ந்து இடம்பெறும் சகல தேர்தல்களும் சுதந்திரமாகவும், நீதியானதாகவும் நடத்தும் சட்ட திருத்தங்களை மேற்கொள்ளல் அவசியமாகும்.