விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தொடர்ந்தும் உர பிரச்சினையை தீர்க்க தவறினால், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த திஸ்ஸ அத்தநாயக்க, பிரதான எதிர்க்கட்சியாக, ஐக்கிய மக்கள் சக்தி விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கத் தவறியமை பாரிய அநீதியான ஒன்றெனவும் அவர் கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
”இலங்கை இன்று எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை, உரப் பிரச்சனை. இதனால் நெற் செய்கை மாத்திரமல்லாமல் அனைத்து விவசாயம் சார்ந்த செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடவில்லை, தமது செய்கைக்கு போதுமான உரம் வழங்க வேண்டும் எனறே கோருகின்றனர்.
விவசாயிகளின் குறைகளை நிவர்த்தி செய்ய அதிகமான காலஅவகாசம் எடுக்கப்பட்டுள்ளது. ஆகையினால், விவசாயிகளின் இந்தப் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும்.
அத்துடன் விவசாய அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான எதிர்கால நடவடிக்கையை தீர்மானிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு ஒன்றுகூடி ஆராயும்.
நம்பிக்கையில்லா பிரேரணையை தாக்கல் செய்வதன் மூலம் அரசாங்கத்திற்கு ஒரு செய்தியை அனுப்ப கட்சி முயற்சிக்கும் என திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.