1983ம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரத்தின் பின்னர் போராட்ட இயக்கங்கள் அமோகமாக வளர்ந்திருந்தன. போராட்ட குணாம்சங்கள் உள்ள இளைஞர்கள் வடகிழக்கில் நிரம்பியிருந்தார்கள்.
ஆனால் இன்று அந்த நிலை மாறி 1983க்கு முன்பு இருந்த நிலையை விட மோசமான நிலையில் தமிழ் மக்கள் இருக்கின்றார்கள்.
இந்த கட்டத்தில் உண்மையிலேயே தமிழ் மக்களை தமிழ்த் தேசியத்தை நேசிக்கின்றவர்களாக இருந்தால் எங்களது சுயகௌரவத்தை,கட்சியின் வளர்ச்சியை, சுயநல தனி மனித எண்ணங்களை விடுத்து ஒன்றாக இணைந்து தற்போதைய நிலைமையில் எங்களது பிரதேசத்தையும், மக்களையும்,1 மாகாணசபை முறைமையையும் காப்பாற்ற முன்வர வேண்டும்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
மாகாணசபையை அரசியல் தீர்வு என முழுமையாக ஏற்காவிட்டாலும் அரசியல் தீர்வின் ஆரம்பப் புள்ளியாகக் கருதுகின்றோம். அந்த ஆரம்பப் புள்ளியாக இருக்கின்ற மாகாணசபை முறைமையைப் பாதுகாத்துக் கொள்ள உண்மையிலேயே தமிழ் மக்களை, தமிழ் தேசியத்தை நேசிக்கின்றவர்களாக இருந்தால் ஒன்றிணைய வேண்டும்.
அப்போதைய மூன்று போராட்ட இயக்கங்கள் ஆரம்பத்தில் ஈ.என்.எல்.எப் ஐ உருவாக்கி இருந்தாலும், அதன் இறுதிக் கட்டத்திலே தமிழீழ விடுதலைப் புலிகளும் அதில் சேர்ந்திருந்தார்கள்.
அந்த நான்கு இயக்கங்களும் மிகக் குறுகிய காலம் நன்றாகப் பயணித்தாலும் போராட்ட இயக்கங்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாகப் பிளவுற்று பல உயிர்களையும், மிகத் திறமையான போராட்ட வீரர்களையும், போராட்டத் தலைவர்களை இழந்தோம்.
இறுதியில் தமிழ் மக்கள் இந்த இக்கட்டான நிலைக்குள் தள்ளப்பட்டு மிகவும் மோசமான நிலையிலே இருக்கின்றார்கள்.
தற்போது போராட்டம் வடக்கு கிழக்கிலே இல்லாவிட்டாலும் அந்தக் காலத்தில் போராட்ட இயக்கங்களாக இருந்தவர்கள் அரசியற் கட்சிகளாக மாறியிருக்கின்றார்கள்.
தேர்தல்கள் பலவற்றில் போட்டியிட்டு அங்கத்தவர்களாகவும் இருக்கின்றார்கள். அதே போன்று மிதவாதக் கட்சிகளும் வடக்கு கிழக்கிலே தேசியத்தைக் கருத்தாகக் கொண்டு செயற்படுகின்றார்கள்.
ஆனால் தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் அடக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, அவர்களது உடைமைகள் கபளீகரம் செய்யப்பட்டு, கலாச்சாரங்கள் மழுங்கடிக்கப்பட்டு மிகவும் மோசமாக இருக்கும் இந்தக் காலகட்டத்திலே தமிழ்த் தேசியத்தை விரும்பும் தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டிய ஒரு தேவை எமக்குள்ளது.
1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் கூட மத்திய அரசாங்கத்தினால் கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் எதிர்காலத்தில் மாகாணசபை முறைமை இருக்குமோ என்ற சந்தேகம் கூட எழுகின்றது. இந்த மாகாணசபையைத் தமிழ் மக்கள் தங்களது அரசியற் தீர்வு என முழுமையாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அரசியற் தீர்வின் ஆரம்பப் புள்ளியாகக் கருதுகின்றார்கள்.
அந்த வகையில் அந்த ஆரம்பப் புள்ளியாக இருக்கின்ற மாகாணசபை முறைமையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாக இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.