மாவீரர் நாளும் மாற வேண்டிய உத்தியும்

“ஒப்பீட்டளவில் மாவீரர் நாள் நினைவேந்தல் குறித்து, கடந்த 13 ஆண்டுகளில் அதிகபட்ச நெகிழ்வுத்தன்மையை அரசாங்கம் இம்முறை கடைப்பிடித்தது என்பதில் சந்தேகம் இல்லை”

“விடுதலைப் புலிகளின் காலத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு சற்றும் சளைக்காத வகையில், சில இடங்களில் அதனை விட சிறப்பான முறையில் இம்முறை நிகழ்வுகள் நடந்தேறியிருக்கின்றன”

கடந்த வாரம் இதே நாள் வடக்கு, கிழக்கு முழுவதும், மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளால் நிரம்பியிருந்தது.

மாவீரர் துயிலும் இல்லங்கள், சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட நினைவிடங்கள் என, தமிழர் தாயகப் பகுதிகளில் சுமார் 50இற்கும் அதிகமான இடங்களில், பெரியளவில் மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றன.

மாவீரர் நாளின் உச்சக்கட்ட நிகழ்வு, மாலை 6.05 மணி தொடக்கம், 6.07 மணி வரை இடம்பெறும் நிகழ்வு தான்.

ஒரு நிமிடம் மணியொலி, ஒரு நிமிட அகவணக்கம், அதனைத் தொடர்ந்து பொதுச்சுடர் மற்றும் ஈகச்சுடர்கள் ஏற்றப்படுதல்.

இந்த நிகழ்வுக்காக தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள துயிலுமில்லங்கள் மற்றும் நினைவிடங்கள் ஒவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டிருந்தார்கள்.

விடுதலைப் புலிகளின் காலத்தில் மாவீரர் நாள் என்பது மிகப் பெரியளவிலான ஏற்பாடுகளுடன், இடம்பெறும் ஒன்று.

தீபம் ஏற்றும் நேரத்தில் ஒவ்வொரு துயிலுமில்லத்தை நோக்கியும் ஆயிரக்கணக்கான மக்கள் படையெடுப்பது வழமை.

விடுதலைப் புலிகள் 1989ஆம் ஆண்டில் இருந்து, இதற்கான ஒழுங்கமைப்பு நடைமுறைகளை படிப்படியாக வகுத்துக் கொண்டனர்.

விடுதலைப் புலிகளுக்குப் பின்னரான காலகட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இருந்த போது, மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்துவதற்கு எந்த அனுமதியும் இருக்கவில்லை.

கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில், இத்தகைய நிகழ்வுகளை தடுக்கும் முயற்சிகள் தீவிரமாக எடுக்கப்பட்டன. அதனையும் தாண்டி நினைவேந்தல்கள் இடம்பெற்றன.

நல்லாட்சி அரசின் காலத்தில் ஓரளவுக்கு நீக்குப் போக்கான அணுகுமுறை காணப்பட்டது. அதனால் துயிலுமில்லங்களில் தீபம் ஏற்றும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

ஆனால் இந்தமுறை ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம், விடுதலைப் புலிகளின் பெயர்களைப் பயன்படுத்தாத வகையில், நினைவேந்தல்களை முன்னெடுக்கத் தடையில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்தது.

சில இடங்களில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார், தலையிருக்க வால் ஆடியது போல, அங்காங்கே, தங்களின் அடாவடித்தனங்கள், கைவரிசையைக் காட்டியிருந்தனர்.

ஆனாலும் ஒப்பீட்டளவில் மாவீரர் நாள் நினைவேந்தல் குறித்து, கடந்த 13 ஆண்டுகளில் அதிகபட்ச நெகிழ்வுத்தன்மையை அரசாங்கம் இம்முறை கடைப்பிடித்தது என்பதில் சந்தேகம் இல்லை.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் உரையாற்றிய போது இந்த அணுகுமுறையை வரவேற்றிருந்தார். இதனை ஒரு நல்லெண்ண சமிக்ஞை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

நினைவேந்தல் உரிமை தமிழ் மக்களுக்கு மறுக்கப்படுவது குறித்து கடந்த பல ஆண்டுகளாகவே, ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலும், வேறு பல அரங்குகள், அறிக்கைகளிலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது.

தமிழர்கள் இழந்த தமது உறவுகளை நினைவுகூரும் உரிமையை அனுவிக்கும் நிலை இருக்க வேண்டும் என்றும் அதனை அரசாங்கம் பறிக்க கூடாது என்றும், சர்வதேச அளவில் வலியுறுத்தப்பட்டு வந்தது.

இதுவரை காலமும் அதற்கு மசிந்து கொடுக்காத அரசாங்கம் இந்த முறை ஒரு வித்தியாசமான முடிவை எடுத்திருக்கிறது.

இந்த நிலையில், தமிழர் தாயகம் எங்கும் மாவீரர்களுக்காக சுடர் ஏற்றவும் அஞ்சலி செலுத்தவும், பல்லாயிரக்கணக்கான மக்கள் துயிலுமில்லங்களுக்கு சென்றிருந்தனர்.

அத்தருணம் உணர்வுபூர்வமான ஒன்று. அதனை வார்த்தைகளால்- எழுத்துக்களால் வர்ணிக்க முடியாது. அத்தகைய இடங்களில் நேரடியாக தரிசனம் செய்தவர்களுக்கு அந்த உண்மை இலகுவாகப் புரிந்து விடும்.

வாருங்கள் என்று யாரும் அழைக்கவில்லை. வீடுகளுக்கு வாகனங்களை அனுப்பி ஆட்களையும் திரட்டவில்லை.

ஆனாலும் மாலைப் பொழுதில், குழந்தைகள் தொடக்கம், முதியவர்கள் வரை, துயிலுமில்லங்களை நோக்கித் திரண்டு சென்றனர்.

மாவீரர்களுக்கு உணர்வு ரீதியாக ஒன்றித்திருந்து அஞ்சலித்து விட்டு வெளியேறிச் சென்றனர். எல்லாமே அமைதியாக நடந்தேறின.

இதனை ஒழுங்கமைக்க விடுதலைப் புலிகள் இருக்கவில்லை. அவர்களால் வழிநடத்தப்படவும் இல்லை.

எல்லாவற்றையும் அந்தந்தப் பகுதி மக்களே பார்த்துக் கொண்டனர். அவர்களே துயிலுமில்லங்களை துப்புரவாக்கி, அலங்கரித்து. அந்த நாளுக்காக தயார்படுத்தினர். ஒழுங்கமைப்புகளையும் செய்து நிறைவேற்றினர்.

விடுதலைப் புலிகளின் காலத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு சற்றும் சளைக்காத வகையில், சில இடங்களில் அதனை விட சிறப்பான முறையில் இம்முறை நிகழ்வுகள் நடந்தேறியிருக்கின்றன.

இந்தமுறை மாவீரர் நாளும் அதற்காக திரண்ட தமிழ் மக்களும், இலங்கை அரசாங்கம் தனது கடந்த கால உத்திகளை மறு ஆய்வு செய்து கொள்வதற்கும், எதிர்கால அணுகுமுறைகளை வகுத்துக் கொள்வதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த காலங்களில் தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமை மறுக்கப்பட்டது.

விடுதலைப் புலிகளின் தடயங்களே இருக்க கூடாது என்று, எல்லா துயிலுமில்லங்களும் அழிக்கப்பட்டு, பல இடங்கள் படைத்தளங்கள் ஆக்கப்பட்டன.

நினைவேந்தியவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிடித்து நீண்டகாலம் சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

இவற்றையெல்லாம், தாண்டி விடுதலைப் புலிகள் இல்லாத – அவர்கள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக, அவர்களின் இலட்சியம் மண்ணில் புதைக்கப்பட்டு விட்டதாக, அறிவிக்கப்பட்டு 13 ஆண்டுகளுக்குப் பின்னரும் மாவீரர் நாள் என்பது தமிழர்களால் உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கின்ற ஒரு நாளாக போற்றப்படுகிறது.

இந்த நாளை தமிழர்களின் மனங்களில் இருந்து மறைக்கின்ற ஒட்டுமொத்த முயற்சியும் தோல்வியடைந்து விட்டது என்பதை இது உணர்த்தியிருக்கிறது.

இதற்கு மேலும், மாவீரர் நாள் போன்ற நினைவேந்தல்களைத் தடுப்பது பயனற்ற உத்தி என்பதை அரசாங்கமும், அதன் கருவிகளும் உணர்ந்து கொள்ளாவிட்டால், இனி எப்போதும் அவர்களால் அந்த புரிந்துணர்வுக்கு வர முடியாது.

மாவீரர் நாளுக்குத் தடைகளை ஏற்படுத்தி, குழப்பி வந்ததன் மூலம், அரச படைகள் தான், தமிழ் மக்களில் இருந்து விலகிச் சென்றனரே தவிர, விடுதலைப் புலிகளோ, மாவீரர்களோ அல்ல.

மாவீரர்களின் நினைவுகளை இல்லாமல் செய்வது சாத்தியமற்றதென உணருகின்ற போது, அதனை சரியாக கையாளுவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்.

அவ்வாறு செய்வது புத்திசாலித்தனமானது. இனங்களுக்கிடையிலான பரஸ்பர நம்பிக்கை மற்றும் நல்லெண்ணத்தை தோற்றுவிக்க உபயோகமானதாக இருக்கும்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடக்கி ஒடுக்கி விட முடியாது என்பதும் இதன் மூலம் இடித்துரைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களுக்குள் இன்னமும் விடுதலை நெருப்பு அணையவில்லை. அந்த நெருப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வது முக்கியம்.

இதனை தீபமாகவும் பயன்படுத்தலாம், தீப்பந்தமாகவும் மாற்றலாம்.

அரசாங்கம் தமிழர்களுக்கான உரிமைகளையும் அதிகாரங்களையும் பகிர்ந்து கொடுப்பது தான், எல்லா தரப்பினருக்கும் சாதகமான யதார்த்தபூர்வான அணுகுமுறையாக இருக்கும்.

மாறாக, கடந்த 13 ஆண்டுகளாக நினைவேந்தல்கள் தொடர்பாக கடைப்பிடிக்கப்பட்ட உத்திகளைப் போல, இனியும் தொடரும் நிலை ஏற்பட்டால், அது பாதகமான விளைவுகளையே தோற்றுவிக்கும்.

தமிழர் மக்களை அரவணைத்துச் செல்லும் போக்கை அரசாங்கம் கடைப்பிடிக்க விரும்பினால், மாவீரர் நாள் போன்று எல்லா விடயங்களிலும் புதிய அணுகுமுறைகளையும் சிந்தனைகளையும் வகுத்துக் கொள்ள வேண்டும்.

அது சிங்களத் தலைவர்கள் மீது தமிழ் மக்கள் நல்ல பிப்பிராயத்தைக் கட்டியெழுப்பவும் உதவும்.

-சத்ரியன்