நடைமுறைக்கு பொருந்தும் வகையில் மின்கட்டணத்தை திருத்தம் செய்யாவிட்டால் எதிர்வரும் ஆண்டு நாளாந்தம் 6 முதல் 8 மணித்தியாலங்கள் வரை மின்துண்டிப்பை அமுல்படுத்த நேரிடும்.மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பதை தவிர்த்து தற்போதைய நிலையில் மாற்றுத்திட்டம் ஏதும் கிடையாது என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (06) மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டவாறு குறிப்பிட்டார்.
மின்சார சபை எதிர்கொண்டுள்ள நட்டத்தை ஈடு செய்வதற்காக மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும்,இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவும் நாட்டு மக்களை தவறான வழிநடத்தியுள்ளனர்.
கடந்த காலங்களின் எதிர்கொண்ட நட்டத்தை முகாமைத்துவம் செய்யும் வகையில் மின்கட்டணத்தை திருத்தம் செய்யும் எவ்வித பரிந்துரைகளும் அமைச்சரவைக்கு முன்வைக்கப்படவில்லை.
மின்னுற்பத்திக்கான செலவை முகாமைத்துவம் செய்யல்,ஒரு வருடத்தில் இருமுறை மின் கட்டணத்தை நடைமுறைக்கு சாத்தியமான வகையில் திருத்தம் செய்யும் யோசனைகள் மாத்திரம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.
2023 ஆம் ஆண்டுக்கான மின்னுற்பத்திக்கான மொத்த செலவை இலங்கை மின்சார சபை மதீப்பீடு செய்து அமைச்சுக்கு சமர்ப்பித்துள்ளது.
நீர்மின் மற்றும் உராய்வு எண்ணெய் ஊடாக மின்சார உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் தற்போது மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படுகிறது.
ஒரு மின்னலகு உற்பத்திக்கு மாத்திரம் 56.6 ரூபா செலவாகும் நிலையில் எதிர்வரும் ஆண்டு இந்த தொகை பன்மடங்கு அதிகரிக்க கூடும் என மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.மின்சார உற்பத்திக்கு மாதம் 800 பில்லியன் ரூபா செலவாகும் நிலையில் 500 பில்லியன் ரூபாவை பெற்றுக்கொள்ளும் வகையில் இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு கடந்த ஆகஸ்ட் மாதம் மின்கட்டண அதிகரிப்புக்கு அனுமதி வழங்கியது.ஒவ்வொரு ஆண்டும் மின்சார கட்டணத்தை இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு திருத்தம் செய்திருந்தால் தற்போது இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்காது.
ஒரு மின்னலகு உற்பத்திக்கு 56.6 ரூபா செலவாகும் நிலையில் பொது மக்களிடமிருந்து தற்போது ஒரு மின் அலகுக்கு 29.14 ரூபா அறவிடப்படுகிறது.இலங்கை மின்சார சபை மாதாந்தம் 423 பில்லியன் ரூபாவை வருமானத்தை காட்டிலும் மேலதிகமாக செலவிடுகிறது.இந்த தொகையை வழங்க முடியாது என திறைச்சேரி குறிப்பிட்டுள்ளது.
நடைமுறைக்கு பொருத்தமான முறையில் மின்சார கட்டணத்தை திருத்தம் செய்யாவிடின் எதிர்வரும் ஆண்டு நாளாந்தம் 6 அல்லது 8 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பை செய்ய நேரிடும்.மின்கட்டணத்தை தவிர்த்து பிற திட்டங்கள் ஏதும் கிடையாது.தனியார் மின்னுற்பத்தி நிலையங்களுக்கு மாத்திரம் 70 பில்லியன் ரூபாவும்,மின் விநியோகஸ்தர்களுக்கு 40 பில்லியன் ரூபாவும் செலுத்த வேண்டும். மின்விநியோகஸ்தர்களுக்கான கட்டணத்தை வழங்காவிடின் அது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும்.
மின்கட்டணத்தை அதிகரிக்கும் அமைச்சரவை யோசனை சட்டபூர்வமானது இல்லை என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளமை பொருத்தமற்றது. சட்டமாதிபரின் ஆலோசனைக்கு அமையவே மின்கட்டணம் திருத்தம் தொடர்பான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது என்றார்.