மின்கட்டண அதிகரிப்பு,மின் விநியோக துண்டிப்பு ஆகிய காரணிகளினால் சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறை பாதிக்கப்பட்டு எதிர்வரும் மார்ச் மாதமளவில் நாட்டில் மீண்டும் போராட்டம் தோற்றம் பெற அதிகம் வாய்ப்புள்ளது என பிவிதுரு ஹெல உறுமய அமைப்பின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
மஹரக பகுதியில் ஜனவரி முதலாம் திகதி (01) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டது. பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து பரந்துபட்ட அரசியல் கூட்டணியை இவ்வார காலத்திற்குள் ஸ்தாபிப்போம்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இனியும் பிற்போட முடியாது, அடுத்த மாதம் நிச்சயம் தேர்தலை நடத்த வேண்டும்.தேர்தலை நடத்த நிதி இல்லை என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.தேர்தலை நடத்த வரவு செலவு திட்டத்தில் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்கள் அனைத்தும் மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் காணப்படுகிறது.சமூக பாதுகாப்பு அறவீட்டுத் தொகை வரி மக்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மின்கட்டண அதிகரிப்பை தவிர்த்து வேறு திட்டம் ஏதும் கிடையாது என மின்சாரத்துறை அமைச்சர் குறிப்பிடுவது வேடிக்கையாக உள்ளது.
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறை முழுமையாக பாதிக்கப்படும்,மக்கள் பொருளாதார ரீதியில் மேலும் பாதிக்கப்படுவார்கள்.இவ்வாறான பின்னணியில் எதிர்வரும் மார்ச் மாதமளவில் மீண்டும் போராட்டம் தலைதூக்கும் என்றார்.