மீன்பிடிப் படகுகளை ஏலம்விடுதல் தொடர்பில் இந்தியத் தூதரகம் அறிக்கை

இந்திய மீன்பிடிப் படகுகளை இலங்கையில் ஏலம்விடும் செயற்பாடுகள் தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இந்திய மீன்பிடி படகுகள் ஏலம்விடப்படுகின்றமை தொடர்பாக வெளியான பல்வேறு அறிக்கைகளும் செய்திகளும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கவனத்துக்கு வந்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக இந்திய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் இருதரப்பு புரிந்துணர்வு ஒன்று ஏற்கனவே உள்ளது என்பதை முதலில் வலியுறுத்தி கூறுகின்றோம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புரிந்துணர்வுக்கு அமைவாக இலங்கையில், இயக்க முடியாத நிலையிலுள்ள இந்திய மீன்பிடி படகுகளை அகற்றுவது குறித்த தீர்மானங்களை மேற்கொள்வதற்காக இந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகள் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவிருந்தனர். இலங்கை அரசாங்கத்திடம் இந்த விஜயத்திற்கு தேவையான அனுமதியை உயர்  ஸ்தானிகராலயம் மீண்டும் கோரியுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.