முக்கிய வீடியோவை வௌியிடப்போகும் Channel 4

இலங்கை தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோவை நாளை ஒளிபரப்ப பிரித்தானியாவின் channel 4 ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2018ஆம் ஆண்டு இலங்கை அரச புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவருக்கும் ஏப்ரல் 21 தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சந்திப்பைக் குறிப்பிட்டு இந்த நிகழ்ச்சித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் ‘த டைம்ஸ்’ நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

பிரித்தானியாவின் Channel 4 இலங்கையில் போர்க்குற்றங்கள் நடந்ததாக பல சர்ச்சைக்குரிய வீடியோ காட்சிகளை ஒளிபரப்பி இலங்கையில் பிரபலமடைந்தது.

யுத்தம் முடிவடைந்த பின்னர், “இலங்கையின் கொலைக்களம்” (Sri Lanka’s Killing Fields) என்ற சர்ச்சைக்குரிய வீடியோவில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் பல சந்தர்ப்பங்களில் அப்போதைய அரசாங்கத்தால் உத்தியோகபூர்வமாக நிராகரிக்கப்பட்டன.

ஆனால் இலங்கையை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியவர்களை மேற்கோள்காட்டி இத்தகைய குற்றச்சாட்டுகள் அடங்கிய வீடியோக்கலை Channel 4 தொடர்ச்சியாக ஒளிபரப்பியது.

மீண்டும் நாளை இலங்கை தொடர்பான மற்றுமொரு சர்ச்சைக்குரிய வீடியோவை ஒளிபரப்பப் போவதாக அறிவித்துக்கொண்டு களம் இறங்குகிறது பிரித்தானியாவின் Channel 4.

தற்போது நாட்டை விட்டு வெளியேறி சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி வரும் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையான் குழுவின் ஊடகப் பேச்சாளராகப் பணியாற்றிய ஒருவரே இது தொடர்பான தகவல்களைத் தெரிவித்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

அதிகார மாற்றத்திற்கு தகுந்தாற்போல் நாட்டில் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த சந்திப்பை ஏற்பாடு செய்ததாக குறிப்பிடப்படும் நபர் அதில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.