முதலில் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னரே தேர்தலை நடத்த முடியுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்நோக்கியுள்ள தற்போதைய பொருளாதார பின்னடைவுக்கு மத்தியில், அரசாங்கம் உறுதியான பொருளாதார அடித்தளத்தை ஏற்படுத்தினால் மட்டுமே புதிய தேர்தலை நடத்த முடியும் என்றார். விசேட அறிக்கை மூலம் நேற்று முன்தினம் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மிக முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டவுடன், பொருத்தமான 225 பிரதிநிதிகளை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்வதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமெனவும், அவர்களை தெரிவு செய்யும் பொறுப்பும் அதிகாரமும் பொது மக்களுக்குள்ளது எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடியைச் சமாளிக்க நாட்டின் பிரஜை ஒவ்வொருவரும் ஒன்றுபட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கூறியுள்ளதுடன், அரசியல்வாதிகள் மற்றும் மக்களிடமிருந்து அர்ப்பணிப்பை எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவ்வாறு காணப்பட்டால் மட்டுமே உலக நாடுகள் இலங்கைக்கு உதவ முன்வருமென பிரதமர் மேலும் கூறியுள்ளார்.
அத்துடன் நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் நாம் உறுதியாக உள்ளோம் என்பதை அரசியல்வாதிகளும், ஒட்டுமொத்த மக்களும் உலகுக்கு நிரூபிக்க வேண்டுமெனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
எனவே நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்துக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்குமாறு பிரதமர் அனைவரிடமும் கேட்டுக் கொண்டுள்ளார்.