முதுகு தெரிவதால் ஆட்களை உறுதிப்படுத்துவது சிரமமாம்: இராணுவப் பேச்சாளர் சொல்கிறார்

மார்ச் 7 ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகில் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸாருக்கு உதவுவதற்காக அனுப்பப்பட்ட இராணுவத்தினர் இரும்பு கம்பிகள் மற்றும் கொட்டன்களை வைத்திருந்தார்களா என்பதை அறிய இலங்கை இராணுவம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்தார்.

இரும்புக் கம்பிகள் மற்றும் மரக் கொட்டன்களுடன் இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டுள்ள புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.

புகைப்படத்தின் மூலத்தை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த போராட்டத்தை கட்டுப்படுத்த இராணுவத்தினர் பயன்படுத்தப்படவில்லை என இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

அவரது கருத்துப்படி, இராணுவத்தினர் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில், போராட்டக்காரர்களை சமாளிக்க பொலிஸ் கலகக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படை முன் வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தன.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் இராணுவத்தினர் ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் கணியில் ஈடுபடவில்லை என பிரிகேடியர் ரவி ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரின் முதுகைக் காட்டும் புகைப்படமே இருப்பதால், அன்றைய தினம் கடமையில் இருந்த அராணுவத்தினர் இரும்பு கம்பிகள் மற்றும் கொட்டன்களுடன் இருந்தார்களா என்பதை சரிபார்க்க முடியாது என்றார்.

புகைப்படம் அண்மையில் எடுக்கப்பட்டதா அல்லது பழைய சம்பவத்தில் எடுக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த நீண்ட காலம் தேவைப்படும் எனவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.