முல்லைத்தீவில் மனிதப் புதைகுழி தடயங்களை அழிக்க அரசு முயற்சி

முல்லைத்தீவில் அகழப்படும் மனிதப் புதைகுழிகள் தொடர்பில் அரசாங்கம் தடயங்களை அழிப்பதற்கு முயற்சிக்கலாம் என்றும் அந்த விடயத்தில் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கு உலக நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி யோகராசா தனரஞ்சினி தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்- இன்றுடன் 2,390 ஆவது நாளாக பல இன்னல்களுக்கு மத்தியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக தெருவில் நின்று போராடி வருகின்றோம்.

2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்ப்பட்ட காணாமல் போனோர் பணிமனை இன்று வரை தனது பணியை செவ்வனே செய்து முடிக்கவில்லை. ஆயினும், ஜெனிவா கூட்டத் தொடர் வருகின்ற காலப் பகுதிகளில் தாமும் வேலை செய்வதாகவும், அவர்களது விவரங்களை பெற்று மக்களுக்கு தாம் பதிலளிப்பதாக காட்டுவதற்காகவும் தமது பணிகளை மும்முரமாக வெளிக்காட்டுகின்றனர். நாளையதினம் (இன்று) கிளிநொச்சி மாவட்டத்தில் ஓ.எம்.பி. அலுவலகம் வந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்களை அழைத்து அதற்கான பரிகாரம் வழங்கப் போவதாக அறிய முடிகின்றது.

நாம் பல மாவட்டங்களில், பல இடங்களில் மற்றும் பல காலங்களில் ஓ. எம்.பி. பணிமனையை எதிர்த்து நின்றோம். அதாவது மாவட்ட ரீதியாக அவர்கள் எந்தவிதமான செயல்படுகளையும் செய்யாதவாறு எதிர்த்தோம். இன்றும் நாம் ஓ.எம்.பி.அலுவலகத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனை எப்பொழுதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். அந்த அலுவலகத்தின் ஊடாகவோ அல்லது இலங்கை அரசாங்கத்தின் ஊடாகவோ தீர்வு கிடைக்கப் போவ தில்லை என்பதால் தான் 38 ஆவது கூட்டத்தொடரில் இருந்து இன்று வரை ஜெனிவாவில் உண்மையான குரலினை பதிவு செய்து வருகின்றோம்.

ஓ.எம்.பி.அலுவலகம் அரசாங்கத்தை காப்பாற்ற முனையாது விலகிக்கொள்ள வேண்டும். அரசாங்கத்துடன் சார்ந்து அரச சம்பளம் வாங்கும் மாவட்ட செயலகமாக இருப்பினும் அல்லது பிரதேச செயலகமாக இருப்பினும் அங்கே பணிபுரிபவர்களால் கூட அந்தப் பதவிகளில் இருப்பதால், எமது உறவுகளின் உயிர்களுக்கு என்ன நடந்தது என்று கேட்க முடியாமல் உள்ளனர். ஆனால், அரசாங்கத்துக்கு சார்பாக வேலை செய்வதற்கு மக்களிடம் வருகின்றனர். மக்களின் பணிகளைச் சரியாக செய்வதில்லை. தமது தேவைகளுக்காகச் செல்லும் மக்களை இருக்க வைத்துவிட்டு அவர்கள் தொலைபேசியுடன் இருப்பார்கள். ஆனால், ஓ.எம்.பி. அலுவலகம் என்றவுடன் அங்கு வழங்கப்படும் ஜூஸிற்கும், சிற்றுண்டிக்குமாக வேலை செய்வதை கண்டிக்கிறோம்.

முல்லைத்தீவில் அகழப்படும் மனித புதைகுழிகள் எங்கிருந்து வந்தன? யாரால் ஆக்கப்பட்டன? அதனை இல்லாது ஒழிப்பதற்காகத்தான் அகழ்வுப் பணிகளில் அரச படைகளும் இணைந் துள்ளன. அந்த அகழ்வுகள் நீதியான முறையில் இடம்பெறுதல் வேண்டும். இலட்சக்கணக்கில் எமது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கையளிக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்று கூறமுடியாது அரசு தவிர்த்து வருவதுடன் அரசாங்கத்தினால் ஜெனிவா மற்றும் உலக நாடுகளின் அழுத்தத்துக்கு முகம் கொடுக்க முடியாமல் உள்ளது.

ஆகவே, அரசாங்கம் அழுத்தம் கொடுக்கும் நாடுகளை ஏமாற்றும் நோக்கில் இந்த தடயங்களை அழிக்கலாம். ஆகவே புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் மட்டுமன்றி மனித நேயத்துடன் உள்ள அனைத்து உலக நாடுகளும் இவை குறித்த உண்மையினை அறிய உதவ வேண்டும்-என்றார்.