முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் சாரதிகள் தங்குவதற்கு என தனியான ஓய்வு விடுதி வசதிகள் இல்லாமையினால் நோயாளர் காவு வண்டிகளின் சாரதிகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகுவதாகவும், ஓய்வு விடுதிக்கான நிரந்தர கட்டிடம் அமைக்க ஒதுக்கப்பட்ட நிதியினை விடுவித்து திட்டங்களை இவ்வருடத்துக்குள் நிறைவு செய்து தருமாறு கோரி தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வினோ நோகராதலிங்கம் வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களுக்கு இன்றைய தினம் அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் சாரதிகள் தங்குவதற்கு என தனியான ஓய்வு விடுதி வசதிகள் இல்லாமையினால் நோயாளர் காவு வண்டிகளின் சாரதிகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகுவதாக என்னிடம் முறைப்பாடு செய்தமைக்கு தங்களின் மேலான கவனத்திற்கு இவ்விடயத்தை கொண்டு வருகின்றேன்.
வடக்கு மாகாண சபையினால் வாகன தரிப்பிடத்துடன் கூடிய சாரதிகள் தங்குவதற்கான ஓய்வு விடுதி நிர்மாணிக்கவென நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் இதுவரை ஆரம்பக்கட்ட வேலைகள் கூட தொடங்கப்படவில்லை என அறிய முடிகின்றது.
நோயாளர் காவு வண்டிகள் எவ்வாறு விசேட கவனம் எடுத்து பராமறிக்கப்பட வேண்டுமோ அது போலவே அதன் சாரதிகளுக்கும் முறையான ஓய்வும் வசதிகளும் செய்து கொடுக்க வேண்டியது அக்கறையுள்ள ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
இவ்விடயமாக மாகாண சுகாதார திணைக்களம் உரிய மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது சாரதிகள் அனைவரும் வைத்தியசாலை பணிப்பாளரின் விடுதியிலேயே தற்காலிகமாக தங்கியிருக்கின்றனர். பல தடவைகள் வட மாகாண சுகாதார திணைக்கள அதிகாரிகளுடன் நிரந்தர வைத்தியசாலைப் பணிப்பாளரை நியமிக்கக் கோரியும்,நியமனம் செய்யப்படாமையினால் வைத்தியசாலை நிர்வாகம் செயலிழந்து காணப்படுகின்றது.
தற்போதைய சுகாதார நெருக்கடி நிலையில் தொடர்ந்தும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரால் நேரடியாக வைத்திய சாலையையும் நிர்வகிப்பது இயலாததாகும். நிரந்தர வைத்தியசாலை பணிப்பாளர் நியமிக்கப்படுமிடத்து தற்காலிகமாக பணிப்பாளர் விடுதியில் தங்கியிருக்கும் சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களை சந்திப்பார்கள்.
ஒரு மாவட்ட பொது வைத்தியசாலை சகல வசதிகளையும் கொண்டிருக்க வேண்டும்.நோயாளர்கள் சிரமம் இன்றி மருத்துவ வசதிகளை பெற வேண்டும். மத்திய அரசாங்கம் இம்மாவட்ட வைத்தியசாலையை பொறுப்பேற்க இருக்கும் காரணத்தை காட்டி ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட மாகாண சபை நிதியை மீளப் பெறவோ சாரதிகளின் அர்ப்பணிப்பான சேவையை கேள்விக்கு உற்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம்.
எனவே காலம் தாழ்த்தாது முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நிரந்தர பணிப்பாளரை நியமிக்குமாறும்,சாரதிகளுக்கான ஓய்வு விடுதிக்கான நிரந்தர கட்டிடத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியினை விடுவித்து திட்டங்களை இவ்வருடத்துக்குள் நிறைவு செய்து தருமாறும் தங்களை கேட்டுக்கொள்கின்றேன் என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.