கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பான விசேட விசாரணை நாளை ஆரம்பிக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தெரிவித்துள்ளது.
குறித்த தினத்தில் பதிவாகிய சொத்து சேதம் தொடர்பான விசாரணைகளுக்காக ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளை முதல் HRCSL வளாகத்திற்கு நாளாந்தம் வரவழைக்கப்படுவார்கள் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவி உச்ச நீதிமன்ற நீதிபதி (ஓய்வு பெற்ற) ரோஹினி மாரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரியின் தலைமையில் விசாரணைக் குழுவை நியமித்துள்ளது.
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அதற்குப் பிந்தைய நாட்களில் மனித உரிமை ஆணையத்திற்கு 100க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் மே 15 ஆம் திகதி வரை நாட்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, தமக்கு மொத்தம் 521 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்திலிருந்து 107 முறைப்பாடுகளும், கொழும்பு மாவட்டத்தில் இருந்து 88 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் புவனேக ஹேரத் தெரிவித்துள்ளார்.
86 முறைப்பாடுகள் குருநாகல் மாவட்டத்திலிருந்தும், 26 முறைப்பாடுகள் களுத்துறை மாவட்டத்திலிருந்தும் கிடைத்துள்ளன.
வீடுகளுக்கு தீ வைத்தல் , கட்சி அலுவலகங்களுக்கு தீ வைத்தல் , பஸ்களுக்கு தீ வைத்தது, வீடுகளை சேதப்படுத்தியது போன்ற புகார்கள் இந்த புகார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
அரசாங்க மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் சேதங்களை மதிப்பிடுவதற்கு அதிகாரிகள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர்.