மைத்திரிபால சிறிசேனவை சிறைபிடிக்க முயற்சித்தால் சு.க. ஆதரவாளர்களை திரட்டி வீதிக்கு இறங்குவோம் – தயாசிறி ஜயசேகர

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மறுசீரமைப்பதற்காக அவசியம் ஏற்படின் மத்திய குழுவின் ஏகமனதான தீர்மானத்துடன் அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கும் பின்வாங்கப் போவதில்லை எனத் தெரிவித்த சு.க. பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர , உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சிறைபிடிக்க முயற்சித்தால் அதற்கு எதிராக அனைத்து சு.க. ஆதரவாளர்களையும் ஒன்று திரட்டி வீதிக்கு இறங்கவும் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

பொலன்னறுவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சுதந்திர கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்து மாநாடுகளை நடத்துவதால் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளோம். எனினும் அந்த சவால்களைக் கண்டு நாம் அஞ்சப் போவதில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்வதற்கு அர்ப்பணிப்புடன் பாடுபட்டோம்.

எனினும் தேர்தல் நிறைவடைந்த பின்னர் பாராளுமன்ற தேர்தலின் போது பொதுஜன பெரமுனவினர் எம்மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

எவ்வாறிருப்பினும் பொலன்னறுவை மக்கள் ஒரு இலட்சத்து 11 ஆயிரத்திற்கும் அதிக வாக்குகளை முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கி அவரை மீண்டும் வெற்றிபெறச் செய்தனர்.

எனினும் அவர் எந்த பதவிகளையும் ஏற்காமல் கட்சியின் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்.

2023 மார்ச் 23 ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல் நிச்சயம் நடத்தப்பட வேண்டும்.

அவ்வாறில்லை எனில் செப்டெம்பர் முதல் தேர்தலுக்கான தினத்தை தீர்மானிக்கக் கூடிய அதிகாரம் தேர்தல் ஆணைக்குழு வசமாகும்.

அதற்கு முன்னர் ஜூனில் அரசாங்கம் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்குமாயின் அதற்கும் சு.க. தயாராகவே இருக்கிறது.

எதிர்வரும் 5 ஆம் திகதி இது தொடர்பில் சு.க. தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருடனும் கலந்துரையாடவுள்ளோம். அதற்கமை உத்தேச உள்ளூராட்சி தேர்தலில் சு.க. பாரிய கூட்டணியுடன் வெற்றிபெறும் என்று உறுதியளிக்கின்றேன்.

2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்திருக்க மாட்டார். அவர்களது தொகுதிகளுக்கு மில்லியன் கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டது.

ஆனால் அதிகளவான வாக்குககளை வழங்கி மக்கள் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக தெரிவு செய்தனர். எனவே அபிருத்திகளால் மக்கள் பலத்தை பெற்றுவிட முடியும் என்று எண்ண வேண்டாம்.

அதனை விட அரசியல் பலம் மேலானதாகும். நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கான தீர்வு காண்பதற்கு மாற்று வழியுடன் பயணிக்க வேண்டும். அதற்கான வேலைத்திட்டத்தையே நாம் தற்போது முன்னெடுத்துள்ளோம்.

2015 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியில் இருந்து கொண்டே அவருக்கான அதிகாரங்களை குறைத்துக் கொண்டார்.

எனினும் அதற்கு முன்னர் ஜனாதிபதிகளாக பதவி வகித்த சந்திரிகா குமாரதுங்கவோ அல்லது மஹிந்த ராஜபக்ஷவோ அதனை செய்யவில்லை.

நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதாகக் கூறியதை நிறைவேற்றிக் காட்டிய ஒரேயொரு தலைவர் மைத்திரிபால சிறிசேன மாத்திரமே.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் அவர் மீது போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும் தனக்கு அது தொடர்பில் முன்கூட்டியே எவ்வித தகவல்களும் வழங்கப்படவில்லை என்பதை அவர் கத்தோலிக்க தேவாலயத்தில் வைத்துக் கூறினார்.

மனசாட்சியின் பிரகாரமே அவர் அதனைக் கூறினார். எனவே போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவரை சிறைபிடிக்க முயற்சித்தால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவாளர்கள் அனைவருடனும் வீதிக்கு இறங்கவும் தயாராகவே இருக்கின்றோம்.

எமது கட்சியின் தலைவருக்கு எதிரான சதியின் பின்னணியில் ஐக்கிய தேசிய கட்சியும் , ஐக்கிய மக்கள் சக்தியுமே உள்ளன, எனவே எம்மை மீண்டும் அவர்களுடன் இணைக்க எவருக்கும் உரிமை கிடையாது என்றார்.