இலங்கை தமிழ் அரசு கட்சியின் அலுவலகத்திற்குள், முன்னாள் யாழ் மாநகரசபை முதல்வர் இ.ஆனோல்ட்டால் தாக்கப்பட்டதாக குறிப்பிடப்படும் ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று (13) மாலை 5.30 அளவில் இந்த சம்பவம் நடந்தது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மார்ட்டின் வீதி அலுவலகத்தில் இன்று மாலை, யாழ் தொகுதிக்கிளை கூட்டம் நடந்தது. கூட்டம் முடிவடைந்த பின், அலுவலக வளாகத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழரசுகட்சியின் உறுப்பினரும் சிவசேனை செயற்பாட்டாளருமான ஜெயமாறன் என்பவரே தாக்கப்பட்டார்.
“சிவசேனையில் உள்ள உனக்கு தமிழ் அரசு கட்சியில் என்ன வேலை? நாங்கள் சொல்லும் சட்டத்திட்டத்தின்படிதான் நடக்க வேண்டுமென கூறி, என் கன்னத்தில் அடித்தார். நான் நிலத்தில் விழுந்து விட்டேன். கட்சி பிரமுகர்கள், உறுப்பினர்கள் பலர் அங்கிருந்தனர். யாரும் எதுவும் செய்யவில்லை. நான் எனது சகோதரனுக்கு தொலைபேசியில் அறிவித்து, வைத்தியசாலையில் அனுமதியாகினேன்“ என தாக்கப்பட்ட ஜெயமாறன் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் பற்றி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.