யாழ்.சாவகச்சேரியில் சீன அரச நிறுவனமான China State Construction Engineering Corporation எனும் நிறுவனத்தில் சீன மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் பெயரிடப்பட்டுள்ளது.
அலுவலக பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள கட்டிடம் முழுமையாக இரு மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளதுடன் தனியான பெயர்ப் பலகையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் அரச கரும மொழிகளான சிங்களமும், தமிழும் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டு பெயரிடப்பட்டுள்ளது.
இதேவேளை, காத்தான்குடியில் அரபி மொழியில் எழுதப்பட்டுள்ளதைப் புத்த பிக்குகளும், ஆளும் கட்சியும் அரபி என்ன இலங்கையின் ஆட்சி மொழியா? எனக் கேட்டுப் போராடியவர்கள் இன்று சீன மொழி இலங்கையில் எங்கும் பயன்படுத்தப்படுவதைக் கேள்விக்கு உட்படுத்தவில்லை.
சீனத் தூதர் சட்டமா அதிபர் மாளிகையில் வைத்த கல்வெட்டில் சீன மொழி இருந்ததற்கு தாங்கள் பரிசாக வழங்கிய இடம் அதனால் சீன மொழியைப் பயன்படுத்தினோம் என்று சமாளித்திருந்தார்.
இந்த நிலையில் வடகிழக்கில் தமிழ்மொழி பிரதான மொழியாக காணப்படும் நிலையில் தனியே சீனமொழி மட்டும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 15 ஆம் நூற்றாண்டில் சீனா இலங்கையை ஆக்கிரமித்து சிங்கள மன்னனை சிறை பிடித்து, சீனாவிற்கு கொண்டு சென்ற நிலை 21 ஆம் நூற்றாண்டிலும் நடக்குமா? எனப் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.