தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை இன்றைய ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து மாகாண, மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகக் கலந்துரையாடினர்.
இச்சந்திப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தலைமையில் முன்னாள் கிழக்கு மாகாணசபைப் பிரதித் தவிசாளரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவருமான பிரசன்னா இந்திரகுமார், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உபதலைவருமான இரா.துரைரெத்தினம், முன்னாள் மண்முனை மேற்குப் பிரதேசசபை பிரதித் தவிசாளரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உபதலைவருமான பொ.கேசவன் செல்லத்துரை, ஜனநாயக போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ், முன்னாள் போரதீவுப் பற்றுப் பிரதேசசபைத் தவிசாளர் யோ.ரஜனி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மாகாண, மாவட்ட ரீதியிலான பல பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், தீர்வு காணப்படக் கூடிய விடயங்களுக்கு உடன் தீர்வினை வழங்குவதற்கான வாக்குறுதிகளும் வழங்கப்பட்டிருந்தன.
அந்த அடிப்படையில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வேதனம் மிகக் குறைந்தளவில் வழங்கப்படுகின்ற விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இது தொடர்பில் செயலாளரூடாக மற்றயை மாகாணங்களில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு எந்தளவிலான வேதனம் கொடுக்கப்படுகின்றது என்பதை அறிந்து எந்த மாகாணத்தில் கூடுதலான வேதனம் கொடுக்கப்படுகின்றதோ அதே அளவிலான வேதனத்தினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி மன்றங்களிலும் ஏனைய திணைக்களங்களிலும் பதில், அமைய அடிப்படையிலான ஊழியர்களை நிரந்தரமாக்குவது தொடர்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்ட போது, அரசாங்கத்தின் தற்போதைய நிலையில் புதிய நியமனங்கள் எதுவும் வழங்கப்படுவதற்கான ஏதுக்கள் இல்லை. அவ்வாறு நியமனங்கள் வழங்கப்படுகின்ற வேளையில் பதில், அமைய ஊழியர்களுக்கு முன்னுரிமை அளித்து நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எழுவான்கரையில் இருந்து படுவான்கரைப் பிரதேசங்களுக்கான ஆற்றுவழி பாதைப் பயணத்திற்காக கடந்த சில மாதங்களாக கட்டண அறிவீடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் அன்றாடம் இதில் பயணிக்கும் மாணவர்கள், அரச ஊழியர்கள், ஏனைய தொழிலாளர்கள், பொதுமக்கள் பெரும் அசௌகரியத்தினை அடைகின்றனர். அதிலும் தற்போதைய பொருளாதார நிலையில் இவ்விடயமானது மக்களை மேலும் கஸ்டப்படுத்துவதாக அமைகின்றது என்ற விடயம் சுட்டிக் காட்டப்பட்டது.
இது தொடர்பில் முதற் கட்டமாக பாடசாலை மாணவர்களுக்கும், அரசாங்க ஊழியர்களுக்குமான கட்டண அறவீட்டினை நிறுத்தவும், ஏனையவர்களுக்கான கட்டண அறவீட்டினைப் படிப்படியாக நிறுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக நீண்டகால முக்கிய பிரச்சனையாக இருக்கின்றன மேய்ச்சற்தரைப் பிரச்சனை குறித்து ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக மயிலத்தமடு, மாதவணை பாரம்பரிய மேய்ச்சற்தரைகளில் வெளி மாவட்டத்தவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளும் உரிய திணைக்கள அதிகாரிகளின் கண்டுகொள்ளாத நிலைப்பாடுகளும், அங்கு பண்ணையாளர்களினால் மேய்ச்சலுக்கு விடப்படும் கால்நடைகள் சுடப்படுவதும், அபகரிக்கப்படுகின்றதுமான விடயங்கள் இடம்பெறுவதுடன் பண்ணையாளர்கள் அச்சுறுத்தப்படுவதான செயற்பாடுகள் குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.
இவ்விடயம் சம்மந்தமாக அரசாங்க அதிபர் மற்றும் சம்மந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு ஊடாக விபரங்களைத் திரட்டி அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறையையும், வலயத்திற்கு வலயம் அதிகமாகவும், குறைவாகவும் இருக்கும் ஆசிரியர்களை சமப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் இரண்டு மாதங்களுக்குள் வலயங்களுக்கிடையிலான ஆசிரியர் சமப்படுத்தலைச் செய்வதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க இருப்பதாகவும், ஆசிரியர் பற்றாக்குறை சம்மந்தாக கல்வி அமைச்சருடன் கதைத்து ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் வெளியேறும் ஆசிரியர்களை மாகாணத்திற்கு பெற்றுக் கொள்வதற்கும், திணைக்களங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இருக்கும் பட்டதாரிகளில் ஒரு பகுதியினரை ஆசிரியர் நியமனத்திற்குள் உள்வாங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மூவின மக்களும் வாழும் இந்த மாகாணத்தில் உயர் பதவிகள், துறைசார்ந்த நிறுவனங்களுக்கு அதிகாரிகளை நியமிக்கும் போது கடந்த காலங்களைப் போலல்லாமல் பாகுபாடு பார்க்காமல் நீதியாகச் செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அந்த விடயத்தினையும் கருத்திற் கொண்டு, திறமையையும், துறைசாந்த நிபுனத்துவத்தையும் அப்படையாக வைத்து குறித்த விடயத்திற்கு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.