ரஸ்யாவிடமிருந்து எரிபொருளை பெறுவதற்காக இரு தரப்பு பேச்சுவார்த்தைகளைஆரம்பிக்கவேண்டும் – 9 கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

தேசிய விடுதலை முன்னணி பிவித்துரு ஹெல உறுமய உட்பட 9 கட்சிகள் எரிபொருளை நீண்ட கால அடிப்படையில் பெறுவதற்காக ரஸ்யாவுடன் அரசாங்கம் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளன.

ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் 9 அரசியல் கட்சிகளும் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன.

நீண்டகால கடன் அடிப்படையில் எரிபொருளை பெறுவதற்காக ரஸ்யாவுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தயங்கினால் ரஸ்யாவிடமிருந்து எரிபொருளை பெற்று எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வை காணவேண்டும் என அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக மக்களை திரட்டி போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தயார் என அந்த கட்சிகள் தெரிவித்துள்ளன.

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை விடுத்த வேண்டுகோளிற்கு ரஸ்யா சாதகமாக பதிலளித்துள்ளது என தாங்கள் அறிந்துள்ளதாகவும் ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தில் நடவடிக்கைகளை எடுத்துள்ளதா என்பது தெரியவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மோதல்கள் இடம்பெறுகின்ற போதிலும் ஐரோப்பா ரஸ்யாவிடமிருந்து ஒரு மில்லியன் பரல்களை கொள்வனவு செய்கின்றது என தெரிவித்துள்ள ஒன்பது கட்சிகளின் தலைவர்கள் இது குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி தங்களிற்கு சந்தர்ப்பம் வழங்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.