ராஜகிரிய – களனி புதிய பாலத்திற்கான நெடுஞ்சாலை ஒப்பந்தம் சீனாவுக்கு

அத்துருகிரிய வெளிச்சுற்று அதிவேக பாதையை இணைக்கும் வகையில் ராஜகிரிய ஊடாக களனி புதிய பாலத்திற்கான நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதற்குரிய ஒப்பந்தத்தை சைனா ஹாபர் என்ஜினியரிங் நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

மூன்று வருடங்களுக்குள் இந்த செயல் திட்டத்தை பூர்த்தி செய்யும் வகையில் இந்த சீன நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று 25 இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் வாராந்த ஊடக சந்திப்பில் அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

இந்த பாதையை மேலும் 15 வருடங்களுக்கு இயக்கி லாபம் ஈட்ட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. 18 வருடங்களின் பின்னர் இந்த நிறுவனம் இலங்கை அரசாங்கத்திடம் குறிப்பிட்ட நெடுஞ்சாலையை ஒப்படைக்க வேண்டும் என அமைச்சர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான அமைச்சரவைத் தீர்மானம் பின்வருமாறு;

05. அத்துருகிரிய இடைமாறல் மற்றும் புதிய களனிப் பாலத்தையும் தொடர்புபடுத்தி தூண்களிலான அதிவேக நெடுஞ்சாலைக் கட்டுமானம்

அத்துருகிரிய இடைமாறல் மற்றும் புதிய களனிப் பாலத்தையும் தொடர்புபடுத்தி தூண்களிலான அதிவேக நெடுஞ்சாலையை, நிர்மாணித்து பராமரித்து ஒப்படைத்தல் (BOT) முறைமையின் அடிப்படையில் மேற்கொள்வதற்காக 2020 ஏப்ரல் 08 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, முதலீட்டுக் கருத்திட்டத்திற்காக குறித்த முதலீட்டாளர்களின் தொழிநுட்ப மற்றும் நிதி யோசனைகள் அடங்கிய போட்டி விலைமனு கோரப்பட்டுள்ளது. அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சைனா ஹாபர் இன்ஜினியரிங்க் கோபரேஷன் கம்பனிக்கு வழங்குவதற்காக நெடுஞ்சாலைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.