ராஜபக்சர்களை ஐ.எம்.எப் உம் காப்பாற்ற முடியாது பௌத்தமும் காப்பாற்ற முடியாது – பா. உ. ஜனா

சர்வதேச நாணய நிதியமோ, உலக வங்கியோ, நீங்கள் கமிசனுக்காக நாட்டைக் காட்டிக் கொடுத்து வளங்களை விற்ற சீனாவோ எமது நாட்டை உய்வடைய வைக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் முட்டாள் தனம். இன்று ராஜபக்சர்களை ஐ.எம்.எப் உம் காப்பாற்ற முடியாது பௌத்தமும் காப்பாற்ற முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சர்வதேச நாணய நிதியம் சம்மந்தமாக தற்போது இலங்கை அரசியலில் அதிகம் கலந்துரையாடப்படுகின்றது. நாட்டின் அத்திவாரம் அந்த நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையில் தங்கியுள்ளது. பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை இல்லையேல் அந்த நாடு வங்குரோத்து நாடாகும். கடன் பெறும் நாடு ஒன்று அந்தக் கடனை அடைக்கும் செயற்திறன் பெற்றதாக இருக்க வேண்டும். ஆனால் அந்தக் கடனை அடைக்க முடியாது என்று கைவிரிப்பது அவமானம்.

இந்து சமுததிரத்தின் மத்தியில் பெருமை மிக்க நாடு நம் நாடு. இன்று இந்து சமுத்திரத்தில் கடனில் சிக்கி சீரழிந்து சின்னாபின்னமாகியுள்ளது. இந்த நாட்டில் அரசாங்கமொன்று உள்ளதா? அரசாங்கத்திற்குப் பொருளாதாரக் கொள்கையொன்று உள்ளதா? நாட்டின் பொருட்களின் விலை மட்டத்தினை நிர்ணயிப்பது அரசாங்கமா? வர்த்தக சமுதாயமா? இடைத்தரகர்களா? அல்லது அமைச்சர்களின் கமிசன் டீல் நடத்துபவர்களா?

அன்று எமது சட்டப் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் கூறியது ஞாபகம் வருகின்றது. மழை பெய்தால் மின்சாரம் மழை பெய்யாவிட்டால் மின்சாரம் இல்லையெனில் நாட்டில் அரசாங்கம் எதற்கு என்றார். இந்த நாட்டில் அரசியல் ஒழுக்கத்தைச் சீரழித்த விமல் வீரவன்;ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார கூட அன்று 20 ரூபாய்க்கும் குறைவான பெற்றோல் விலைக்கு எதிராக எவ்வளவு குரலை எழுப்பினாhர்கள்.

நான் இன்று எமது நாட்டில் எமது மக்களின் உரிமைக்காக ஆயுதம் ஏந்திப் போராடி அந்த ஆயுதப் போராட்டம் தந்த பட்டறிவும் பகுத்தறிவும் காரணமாக ஒருமித்த நாட்டில் பிளவு படாமல் ஒன்றாக வாழ இணைந்துள்ளேன். ஆனால் கோட்டபாய மஹிந்த கம்பனிகள் இந்த நாட்டைச் சீரழித்துள்ளார்கள். இதை நான் சொல்லவில்லை, பெரும்பான்மை மக்களால் பெரும்பான்மை பலத்தால் நான் வென்றேன் என்று ருவன்வெலிசாயவில் பதவி எடுத்த கோட்டபாயவை ருவன்வெலிசாய மகாசங்கத்தினரே வெளியேறு என்கிறார்கள். மல்வத்து, அஸ்கிரிய, ராமானிய நிக்காயாக்கள் வெளியேறு என்கின்றார்கள்.

ஆனால். தமிழர் தரப்பில் இதை விட மேலான வக்கிரமும் உக்கிரமும் இருந்தாலும் இதனைச் சொல்ல முடியாதுள்ளார்கள். கோட்டா கோ கம என்று கோசமிடும் சிங்கள இளைஞர்களே இன்று இதே கோசத்தைத் தமிழ் இளைஞர்கள் இட்டால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பல வருடங்கள் சிறைகளில் தம் வாழ்வைக் கழித்திருப்பார்கள்.

ஆனாலும், காலம் கடக்கவில்லை. கோட்டா கோ கம எமது நாட்டின் தவறுகளைப் புரிவதற்கான அத்திவாரம். அந்த அத்திவாரத்தில் இருந்து புதிய இலங்கைகத் திருநாட்டைக் கட்டியெழுப்புவோம். அதை விடுத்து அனுசரணை வழங்கும் விடயமாக இதே கோசத்தை இதே இடத்தில எம் தமிழர்கள் எழுப்புவர்களாயின், உங்களை அடக்க வரும் அரச கூலிப்படைகளை நீங்கள் எதிர்த்து விரட்டுவது போல் எம் தமிழ் இளைஞர்களும் விரட்டினால் என்ன நடக்கும் என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

சர்வதேச நாணய நிதியமோ, உலக வங்கியோ, நீங்கள் கமிசனுக்காக நாட்டைக் காட்டிக் கொடுத்து வளங்களை விற்ற சீனாவோ எமது நாட்டை உய்வடைய வைக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் முட்டாள் தனம். பணத்தை அச்சடித்தால் பணவீக்கம் ஏற்படும் என்பது பொருளாதார அரிச்சுவடி அது புரியாத, சென்மதி நிலுவைப் பிரச்சனை, வர்த்தக இடைவெளி வரும்போது சர்வதேச வர்த்தகக் கொள்கை என்பன தெரியாத மத்திய வங்கி ஆளுநர், சகோதர பாசத்தால் பொரளாதார அறிவு சற்றும் இல்லாத நிதி அமைச்சர்கள், இலங்கை என்ன ராஜபக்சர்களின் குத்தகை பூமியா? இன்று நீங்கள் ருவன்வெலிசாயவுக்கும் செல்ல முடியாது, நீங்கள் நம்பிய எந்தெவொரு பௌத்த ஸ்தாபனங்களுக்கும் செல்ல முடியாது. தானமும் சங்கமும் உங்களைப் பார்த்து சந்தி சிரிக்கின்றது. இன்று ராஜபக்சர்களை ஐ.எம்.எப் உம் காப்பாற்ற முடியாது பௌத்தமும் காப்பாற்ற முடியாது. நீங்கள் ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது நீங்கள் விதைத்த விதையை நீங்களே அறுவடை செய்ய வேண்டும். அது பயிரோ அல்லது பதரோ என்று உங்கள் மனச்சாட்சியைக் கேளுங்கள்.

இன்று நிதி அமைச்சர் உரையாற்றும் போது இந்த நிலைக்குக் காரணம் தற்போதைய அரசாங்கம் மாத்திரமல்ல மாறி மாறி வந்த அரசாங்கங்கள் அனைத்துமே காரணம், எவர் ஆட்சிக்கு வந்தாலும் இவைகளை நிவர்த்தி செய்ய முடியாது என்று கூறினார். இதனை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம்.

இந்த நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசியல் தலைவர்கள் என்ன செய்தார்கள் என்பதை இங்கு போராடும் இளைஞர்களும், அரசியல்வாதிகளும் புரிந்து கொள்ள வேண்டும். நாடு சுதந்திரமடைந்த உடனேயே இந்த நாட்டின் பூர்வீகக் குடியாகிய தமிழர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டது. மலைநாட்டு மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. 1956ம் ஆண்டு பண்டாரநாயக்கா சிங்களம் மட்டும் என்ற மொழிச்சட்டத்தை இங்கு கொண்டு வந்தார். அதை எதிர்த்து எமது தமிழ் தலைவர்கள் இதே காலி முகத்திடலிலே போராடினார்கள். அவர்களை அரச படைகளை ஏவிவிட்டு இரத்தக் களரிக்குள் உள்ளாக்கினீர்கள்.

1960ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் போது தமிழர் தரப்பு உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியது. ஆனால் அதில் ஏமாற்றப்பட்டார்கள். அதலிருந்து வெளியேறினார்கள். 1970ம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான ஆட்சயின் போது 1972ம் ஆண்டு புதிய அரசியலமைப்பில் தரப்படுத்தலைக் கொண்டுவந்து தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதைத் தடுத்தீர்கள். இதனூடாகவே தமிழ் இளைஞர்கள் போராட்டத்திற்கான ஆயத்தங்களைச் செய்தார்கள்.

1977ம் ஆண்டு ஜெயவர்த்தன அவர்கள் ஐந்து லொறி பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்திற்கு வந்தார். போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்ற கோட்பாட்டை உருவாக்கினார். அரசியற் தீர்வு தமிழ்ர்களுக்கு இல்லை என்றார். 1979ம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தீர்கள்.

மாறி மாறி இவ்வாறு ஆட்சி செய்தது மாத்திரமல்லாமல் 1958, 1978, 1983 களிலே இனக்கலவரங்களை ஏற்படுத்தி சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்தீர்கள். வடக்கு கிழக்கிற்கான நிலவழிப்பாதையை முடக்கி கடல் மார்க்கமாக அனுப்பினீர்கள். வெலிக்கடை சிறையிலே அரசியற் கைதிகளாக இருந்த 53 பேரைக் கொடூரமாகக் கொலை செய்தீர்கள். இப்படியான நேரங்களில் தான் தமிழர் போராட்டங்கள் உக்கிரமடைந்தன.

ஆனால், தொடர்ந்து வந்த பிறேமதாச, சந்திரிக்கா, மஹிந்த, இன்று கோட்டபாய ஆகியோர் போருக்காகவே இந்த நாட்டின் வளங்களைச் செலவழித்தீர்கள். போர்க்கருவிகைளைக் கொள்வனவு செய்வதற்கும், யுத்தக் கப்பல்கள் வாங்குவதற்கு பில்லியன் கணக்கான டொலர்களைச் செலவழித்தீர்கள். யுத்தம் மௌனிக்கப்படடதற்குப் பின்பும் கூட நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புத் துறைக்கு 20 வீதத்திற்கும் மேற்பட்ட செலவீனங்களைச் செய்து கொண்டிருக்கின்றீர்கள்.

இன்று கோட்டபாய ஆட்சிக்கு வரும் போதே இந்த நாட்டின் வருமான வரியினை 8 வீதமாகக் குறைத்தார். அன்று தொட்டு இந்த நாட்டிலே பொருளாதாரச் சீரழிவு ஏற்பட்டது. விவசாயிகளின் வயிற்றில் கை வைத்ததிலிருந்தே அவரது முடிவு ஆரம்பமாகிவிட்டது. இரசாயணப் பசளையைத் தடை செய்தார். விவசாயிகள் வீதிக்கு வந்ததார்கள். இந்த நாட்டிலே நெற் செய்கை மாத்தமிரமல்லாமல் சகல பயிர்ச்செய்கைகளும் 50 வீதத்திற்கும் மேலாக விளைச்சலில் குறைந்தன. இதன் காரணமாக அரிசியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் அளவிற்கு மாறினீர்கள். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசிக்கு இரசாயணப்பசளை கலக்கவில்லை என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கின்றது.

இந்த நாட்டில் தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சனைக்கான நிரந்தரமான அரசியற் தீர்வைக் கொடுக்கவில்லை என்றால் தொடர்ச்சியாக நீங்கள் பாதுகாப்புத் துறைக்கே கூடுதலான பணத்தைச் செலவழிக்க வேண்டி ஏற்படும்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கபட்ட 13வது திருத்தச் சட்டத்தினால் மகாணசபை முறைமை உருவாகியது. இன்று இந்த நாடு மாகாணசபையே இல்லாத நாடாக இருக்கின்றத. எமது அயல்நாடான இந்தியா எதைக் கேட்கின்றது. இந்த நாட்டிலே தமிழர்களுக்கு நிம்மதியான வாழ்வை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுங்கள். அதற்கு அடித்தளமாக மாகாணசபைத் தேர்தலை நடத்துங்கள் அதற்கான அதிகாரத்தைப் பரவலாக்குங்கள் என்று. ஆனால், இந்தியாவை வெறுத்து சினாவின் பின்னால் சென்ற நீங்கள் எதைக் கண்டீர்கள். இந்தியா தான் இன்றைக்கு இந்த நாட்டைக் காப்பாற்றுகின்றது.

பில்லியன் கணக்கான டொலர்களைக் கொடுக்கின்றது. அத்தியாவசியப் பொருட்களைக் கொடுக்கின்றது. சர்வதேச நாணய நிதியத்திற்கு உங்களைச் சிபாரிசு செய்கிறது. அது மாத்திரமல்லாமல் தமிழ்நாட்டு மாநில சபையிலே ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு  40ஆயிரம் மெற்றிக்தொன் அரிசி, 500 மெற்றிக் தொன் பால்மா, அதற்கு மேலாக மருந்துப் பொருள்கள், அத்தியாவசியப் பொருள்கள் போன்றவற்றைத் தருகின்றார்கள். தமிழ் நாட்டு மக்கள் ஒட்டுமொத்த இலங்கை நாட்டுக்கும் உதவி செய்யும் போது நீங்கள் இங்கு தமிழர்களை வெறுக்கின்றீர்கள். இந்த சபையினூடாக தமிழ் நாட்டு மக்களுக்கும், மாநில சபைக்கும், முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.