ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சி பீடமேறி, ஒன்றரை ஆண்டுகளுக்கு உள்ளேயே, நாடு திவாலாகும் கட்டத்தை அடைந்திருக்கின்றது.
ஏற்கெனவே பெறப்பட்ட கடன்களுக்கான வட்டிகளைச் செலுத்துவதற்கே, கடன்களைப் பெற வேண்டிய நிலை; உணவுப் பொருட்களின் இருப்பு அபாயக்கட்டத்தை அடைந்திருக்கின்றது; ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வழங்குமா என்ற சந்தேகம் நீடிக்கின்றது; உள்நாட்டு உற்பத்தி பாரிய வீழ்ச்சியைச் சந்தித்து இருக்கின்றது; விவசாயிகள் உரத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம், கறுப்புச் சந்தை பெரியளவில் விரிந்திருக்கின்றது. அங்கு ஒரு சில பண முதலைகளுக்கான வசதி வாய்ப்புகள் தங்கு தடையின்றி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருகின்றன. மக்களின் வியர்வையை மெல்ல மெல்ல உறிஞ்சி முடித்து, இப்போது இரத்தத்தையும் உறிஞ்சும் வேலைகளை ஆரம்பித்து இருக்கிறார்கள்.
நாட்டின் தேசிய வீரர்களாக, பாதுகாவலர்களாக முன்னிறுத்தப்பட்டே ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சியில் அமர்த்தப்பட்டார்கள். அவர்களை ஆட்சியில் அமர்த்துவதற்காக, பௌத்த விகாரைகளுக்குள் இருந்து பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. தென் இலங்கையின் சமூகக் கட்டமைப்பின் ஆணி வேர், விகாரைகளுக்குள் இருக்கின்ற நிலையில், ராஜபக்ஷர்களின் மீள் வருகைக்கான கட்டியத்தை பௌத்த பிக்குகளே தலைமையேற்று மொழிந்தனர்.
ஆனால், அந்தப் பிக்குகளே ராஜபக்ஷர்கள் ஆட்சியில் அமர்ந்த குறுகிய காலத்துக்குள்ளேயே அவர்களுக்கு எதிராகத் திரும்பி இருக்கிறார்கள். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அண்மித்த வெற்றியைப் பொதுத் தேர்தலில் பெற்று, தங்களுக்கு வேண்டிய அனைத்துச் சட்டத் திருத்தங்களையும் ராஜபக்ஷர்கள் குறுகிய காலத்துக்குள்ளேயே செய்தார்கள்.
ஆனால், ஆட்சியை ஒருமைப்படுத்தி முன்நகர்த்துவதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்துவது குறித்துச் சிந்திக்க மறந்துவிட்டார்கள். அதனால், அரசாங்கத்தின் பங்காளிகள், அனுதாபிகள், திட்டம் வகுப்பாளர்கள் தொடங்கி அனைத்துத் தரப்பினரும் ராஜபக்ஷர்கள் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள்.
ராஜபக்ஷர்களுக்கு எதிராக, தென் இலங்கை தற்போது வெளிப்படுத்தியுள்ள அதிருப்தியின் அளவை, எந்தக் காலத்திலும் வெளிப்படுத்தியது இல்லை. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்ட தருணத்திலும் கூட, தென் இலங்கை மக்கள் தற்போதுள்ள அதிருப்தியின் அளவை வெளிப்படுத்தி இருக்கவில்லை.
ஆனால், இன்றைக்கு ராஜபக்ஷர்களின் நிலை என்பது, அபாயத்துக்குரிய கட்டத்தை அடைந்திருக்கின்றது. குறைந்தது பத்து ஆண்டுகளுக்கான ஆட்சியில் இருக்க வேண்டும் என்கிற திட்டத்தோடு 2019இல் ஆட்சி பீடமேறிய ராஜபக்ஷர்களுக்கு முதல் ஐந்து ஆண்டுகளையே பிரச்சினைகள் இன்றிக் கடக்க முடியுமா என்ற சிக்கல் ஏற்பட்டிருக்கின்றது.
அண்மையில், எரிபொருள் விலையேற்றத்தை எதிர்த்து ஆளுங்கட்சியின் பிரதான கட்சியான பொதுஜன பெரமுனவே கண்டன அறிக்கை வெளியிடும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அந்தக் கட்சி முன்னிறுத்தி ஜனாதிபதியான கோட்டாய ராஜபக்ஷ, அந்தக் கட்சியின் கூட்டணியில் அங்கம் வகித்து மொட்டுச் சின்னத்திலேயே தேர்தலில் வென்ற உதய கம்மன்பில உள்ளிட்டவர்கள் கூடிப்பேசி, முடிவெடுத்து அறிவித்த எரிபொருள் விலையேற்றத்தை, பொதுஜன பெரமுன அறிக்கை ஊடாகக் கண்டிக்கிறது. அதிலும், எரிபொருள் அமைச்சராக கம்மன்பிலவை பதவி விலகுமாறும் கோருகிறது என்றால், ஆளுங்கட்சிக்குள் காணப்படும் குழப்பங்களின் அளவைப் புரிந்து கொள்ள முடியும்.
பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவி வகிக்கின்ற போதிலும், 20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம், அவரின் அதிகாரங்கள் பிடுங்கப்பட்டுவிட்டன. அவ்வாறான நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினதும் அவரது இராணுவ செயலணியினதும் திட்டங்களின் படியே நாடு நிர்வகிக்கப்படுகிறது.
இங்கு, அமைச்சர்களாக இருந்தாலும் அவர்களின் அதிகாரம் செல்லாக்காசான நிலைதான். அப்படியான நிலையில், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்ஷவை மீண்டும் பாராளுமன்றத்துக்குள் நுழைந்து அமைச்சராகப் பதவியில் அமர்த்தினால், தங்களின் அதிகாரங்களை மீளப்பெற முடியும் என்று பொதுஜன பெரமுனவில் குறிப்பிட்டளவான அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள்.
அதன்போக்கில்தான், பசிலின் பாராளுமன்ற பிரவேசத்துக்கான துதிபாடல்களும் ஆராதனைகளும் செய்யப்படுகின்றன. ஆனால், பசில் மீண்டும் அமைச்சரவைக்குள் வந்தால், ஆட்சி அதிகார மையம் இரு துருவங்களாக மாறும்; அது, ஜனாதிபதிக்கு அவ்வளவு இனிப்பானதாக இருக்காது என்று அவரது சகாக்கள் அச்சப்படுகிறார்கள்.
அத்தோடு, ஆளுங்கட்சியின் பங்காளிக் கட்சிகளுக்கு பசில் மீதான பயம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஏனெனில், தங்களது கட்சிகளை இல்லாதொழித்து, ஒரே கட்சியாகப் பெரமுனவை, பசில் வளர்க்க நினைக்கிறார். அதன்மூலம், பங்காளிக் கட்சிகளின் தலையீடுகள் இன்றி, அடுத்த ஜனாதிபதி வேட்பாளராகத் தன்னை நிலைப்படுத்தலாம் என்பது பசிலின் திட்டம்.
அதனால்தான், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட பங்காளிக் கட்சிகளுக்கு எதிரான நிலையை, தன்னுடைய விசுவாசிகளைக் கொண்டு பசில் செய்கிறார். எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிராக வெளியிடப்பட்ட அறிக்கை, உண்மையில் உதய கம்மன்பிலவை இலக்கு வைத்து வெளியிடப்பட்டது.
அண்மையில், விமல் வீரவன்சவின் அமைச்சின் கீழிருந்த அரச நிறுவனமொன்று, அவரிடமிருந்து மஹிந்த அமரவீரவின் அமைச்சுக்கு மாற்றப்பட்டது. அது தொடர்பில், அவருக்கு எந்தவித முன்னறிவிப்பும் விடுக்கவில்லை. அது குறித்து, விமல் வீரவன்ச ‘பேஸ்புக்’கில் புலம்பும் அளவுக்கு அரசாங்கத்தின் உள்குளறுபடிகள் இருக்கின்றன.
இன்னொரு பக்கம், ராஜபக்ஷர்களின் பிரசார பீரங்கிகளாக இருந்த ஊடகங்கள் கூட, இன்றைக்கு எதிரான நிலையெடுத்து விமர்சிக்கத் தொடங்கிவிட்டன. ராஜபக்ஷர்களின் வருகை, நாட்டில் தேனையும் பாலையும் ஓட வைக்கும் என்று 24 மணி நேரமும் ஓதிக்கொண்டிருந்த சம்பந்தப்பட்ட ஊடகங்கள், அரசாங்கத்தின் மீதான மக்களின் அதிருப்தியைச் சமாளிக்க முடியாமல், அதனை மெல்ல மெல்ல வெளிப்படுத்த ஆரம்பித்துவிட்டன.
கொரோனா பெருந்தொற்று, நாட்டு மக்களை அனைத்து விதத்திலும் பாதித்துவிட்டது. வருமானம் என்பது வெகுவாகக் குறைந்துவிட்டது. மக்கள் அடக்குக்கடைகளை நோக்கிச் செல்வது வாடிக்கையாகி விட்டது. நகை நட்டுகள் இல்லாத மக்களின் நிலை, இன்னும் மோசம்.
அப்படியான நிலையில், நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதாகக் கூறிக் கொண்டு, பௌத்த விகாரையின் பின்னணியில், ஒரு மணித்தியாலத்துக்கு மேலாகக் கடந்த கால ஆட்சிகளைக் குறைகூறி, மக்களை எரிச்சலூட்டுகிறார் ஜனாதிபதி. நாடு மீளமுடியாத பொருளாதார அபாயத்தின் இருக்கும் போது, அது குறித்துச் சிந்திக்காமல், மீண்டும் மீண்டும் தங்களின் அனைத்துத் தோல்விகளையும் கடந்த கால ஆட்சியாளர்கள் மீது போட்டுவிட்டு நழுவிவிட முடியும் என்பது, எவ்வளவு அபத்தமானது.
அதிலும் நகைப்புக்குரியது என்னவென்றால், நல்லாட்சிக் காலம் என்கிற ஐந்து வருடங்களுக்கு முன்னாலுள்ள பத்து ஆண்டுகளையும் இதே ராஜபக்ஷர்கள்தான் ஆட்சி செலுத்தினார்கள். ஆனால், அதையெல்லாம் மறந்து நின்று, நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நல்லாட்சிக் காலம் மட்டுமே காரணம் எனும் தோரணை, ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்ற நிலைக்கு ஒப்பானது.
ராஜபக்ஷர்கள் தொடர்ச்சியாக, போர் வெற்றி வாதத்தைத் தங்களது பிரதான காப்புக் கருவியாக கையில் ஏந்தி இருக்கின்றார்கள். இப்போதும் அதையே தூக்கிக் கொண்டு வருகிறார்கள்.
ஆனால், மக்களின் வயிற்றின் பசி, நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் போது, போர் வெற்றி வாதம் ஒரு பொருட்டுக்கும் உதவாது என்பது ராஜபக்ஷர்களுக்கு விளங்கவில்லை. நாட்டின் எதிர்காலம் குறித்த எந்தக் கரிசனையும் இன்றி, தங்களின் குடும்பங்கள், எதிர்கால ஆட்சிக்கான திட்டங்களை மாத்திரமே வைத்துக் கொண்டு, ராஜபக்ஷர்கள் முன்நகர்த்து கொண்டிருக்கிறார்கள். மற்றப்படி, அரசாங்கத்துக்குள் நிகழும் குளறுபடிகளும் கூட ராஜபக்ஷர்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டியின் போக்கிலானவைதான்.
ஆனால், நாடும் நாட்டு மக்களும் இவ்வளவு அபாயங்களைச் சந்தித்து நிற்கும் போது, பிரதான எதிர்க்கட்சியோ எந்தவித பொறுப்பும் இன்றி, தூங்கியே காலத்தைக் கழித்து வருகின்றது. அடுத்த தேர்தல் வர, இன்னமும் காலம் இருக்கின்றது. அப்போது விழித்தால் போதும் என்பது அவர்களின் உத்தேசம். அப்படியான நிலையில், நாடு எப்படித் தப்பித்துக் கொள்ளும்?`