உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு என கைது செய்யப்பட்டு, விளக்கமறியல் உத்தரவின் கீழ், மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனிடம் இருந்து சிறைச்சாலை அதிகாரிகள் கையடக்கத் தொலைபேசி ஒன்றினை மீட்டுள்ளனர்.
மெகசின் சிறைச்சாலையின் தலைமை சிறைக் காவலரும் மற்றொரு காவலரும், நேற்று (1) இரவு வேளையில், ரிஷாத் பதியுதீன் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை அறையின் பக்கம் மேற்பார்வைக்காக சென்ற போது, அவர் தொலைபேசியில் கதைப்பதை கண்டுள்ளதாகவும், பின்னர் அவர் அந்த தொலைபேசியை சிறை அறைக்கு வெளியே வீசிய நிலையில் அதனை கைப்பற்றியதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் , சிறைச்சாலைகள் ஆணையாளர் ( நிர்வாகம்) சந்தன ஏக்கநாயக்க கூறினார்.
‘ வழமையான சிறை அறை மேற்பார்வையில் பிரதான பாதுகாவலரும் மற்றொருவரும் நேற்று இரவு ஈடுபட்டிருந்துள்ளனர்.
இதன்போது ரிஷாத் பதியுதீன் தொலைபேசியில் யாருடனோ உரையாடிக் கொண்டிருப்பதை அவர்கள் அவதானித்துள்ளனர்.
இந்த நிலையில், பிரதான சிறைக்காவலர் தான் தொலைபேசியில் கதைப்பதை அவதானித்ததை அறிந்த ரிஷாத் பதியுதீன், சிறைச்சாலைகள் ஜன்னல் வழியே தொலைபேசியை வீசி எரிந்துள்ளார். இதனையடுத்து, அந்த தொலைபேசியை உடனடியாகவே சிறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
எனவே சிறைச்சாலைகள் கட்டளை சட்டத்தின் பிரகாரம் ரிஷாத் பதியுதீனை கையடக்கத் தொலைபேசி வைத்திருந்தமை தொடர்பில் சிறைச்சாலைகள் தீர்பாயம் முன் நிறுத்தவுள்ளோம். ‘ என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன எக்கநாயக்க கூறினார்.
ஏற்கனவே சிறைச்சாலைகள் வைத்தியர் ஒருவரை அச்சுறுத்தியதாக, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சிறைச்சாலைகள் தீர்பாய விசாரணையையும், பொலிஸ் விசாரணைகளையும் எதிர்க்கொண்டுள்ள பின்னணியிலேயே தற்போது தொலைபேசி வைத்திருந்த விடயமும் வெளிப்பட்டுள்ளது.