ராஜாங்க அமைச்சராக லொகான் ரத்வத்தை பதவி வகித்தவேளை வெலிக்கடை அனுராதபுரம் சிறைச்சாலைகளிற்குள் அத்துமீறிநுழைந்து சிறைக்கைதிகளை அச்சுறுத்தியமை தொடர்பில் அவருக்கு எதிராக கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் உட்பட குற்றச்சாட்டுகளை சுமத்தவேண்டும் என இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட தனிநபர் குழு பரிந்துரை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
குற்றவியல் சட்டம் உட்பட பல சட்டவிதிகளிற்கு ஏற்ப கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் உட்பட குற்றச்சாட்டுகளை சுமத்தவேண்டும் என தனிநபர் குழு பரிந்துரை செய்துள்ளது.
ஆயுதம் ஏந்திய நிலையில் இரு சிறைச்சாலைகளிற்குள் அமைச்சர் நுழைவதற்கு அனுமதித்த சிறைக்காவலர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைக்குள் நுழைபவர்கள் வெளியேறுபவர்களை கண்காணிப்பதற்காக சிசிடிவி கமராக்களை பொருத்தவேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
2021 செப்டம்பர் 21ம் திகதி முன்னாள் மேல்நீதிமன்ற நீதிபதியரசர் குசலா சரோஜினி வீரவர்த்தன தலைமையிலான குழுவொன்று இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டது.
இந்த குழு தனது அறிக்கைகளை 60 நாட்களிற்குள் பரிந்துரை செய்யவேண்டும் என தெரிவித்திருந்தது.
இந்தகுழுவின் பரிந்துரைகளைபார்வையிட்டுள்ள தெரிவித்துள்ள த மோர்னிங் லொகான் ரத்வத்தை இழைத்த குற்றங்கள் குறித்து நம்பகதன்மை மிக்க ஆதாரங்கள் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திவெளியிட்டுள்ளது.
சிறைச்சாலையில் ஆயுதங்களை பயன்படுத்தியமை ( சிறைச்சாலை சட்டம்)ஆயுதங்களை பயன்படுத்தி குற்றமொன்றை இழைத்தமை நாட்டிற்கு அவதூறு ஏற்படுத்த முயன்றமை மக்கள் மத்தியில் அரசாங்கம் குறித்த விருப்பமின்மையை ஏற்படுத்தியமை கொலை முயற்சி மரணத்தை ஏற்படுத்தப்போவதாக அச்சுறுத்தியதன் மூலம் குற்றவியல் அச்சுறுத்தலில் ஈடுபட்டமை ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்தி காயங்களை ஏற்படுத்தியமை உட்பட பல குற்றச்சாட்டுகளை லொகான் ரத்வத்தை புரிந்துள்ளார் என தனிநபர் குழு தெரிவித்துள்ளது.
அரசாங்க விஜயமொன்றிற்கு ஏற்றதல்லாத லொகான் ரத்வத்தையின் பல நடவடிக்கைகள் குறித்தும் தனிநபர் குழு சுட்டிக்காட்டியுள்ளது.