லொஹானின் அமைச்சுப் பதவி ஏற்பு நீதியை மீண்டும் கேள்விக்கு உட்படுத்தியுள்ளது என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான சபா குகதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இராஐாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அவர்களுக்கு ஏற்கனவே இருந்த இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் கைத்தொழில் விடையதானங்களுக்கு மேலதிகமாக (10/03/2022) களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், படகு மற்றும் கப்பற்தொழில் அபிவிருத்தி இராஐாங்க அமைச்சு ஐனாதிபதியால் இன்று வழங்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் லொஹான் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஐாங்க அமைச்சராக இருந்த போது மது போதையில் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல் கைதி ஒருவரை அழைத்து தனது கைத் துப்பாக்கியை கைதியின் தலையில் வைத்து தனது சப்பாத்தை நாக்கால் நக்குமாறு பணித்ததுடன் இழிவான வார்த்தகளால் பேசிய ரத்வத்த தொடர்பான நீதித்துறை விசாரணை நடவடிக்கை முடிவில்லாமல் தொடரும் போது மீண்டும் அமைச்சு பதவி வழங்கப்பட்டமை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்பதை மீண்டும் மீண்டும் உறுதி செய்கின்றது.
மனித உரிமைப் பேரவையில் சிறிலங்காவின் நீதி அமைச்சரும் வெளிவிவகார அமைச்சரும் உள்ளக பொறிமுறையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதாக கூறிய வாக்குறுதி ஏமாற்று என்பதை லொஹானின் பதவி ஏற்பு வெளிப்படுத்தியுள்ளது.