தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர் தலைவர் வசந்த முதலிகேவின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பாகவும் அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறும் அனைத்து அரசியல் கைதிகள் மற்றும் பயங்கரவாத தடைச்சட்ட கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் சிறைச்சாலை ஆணையாளரிடம் கடிதம் ஒன்றை மக்கள் பேரவைக்கான இயக்கம் கையளித்துள்ளது.
அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தற்போது அரசியல் காரணங்களிற்காக நீதிமன்ற உத்தரவின் பேரில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கொழும்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதை நீங்கள் நன்கறிவீர்கள்.
இந்த தடுப்பு நடவடிக்கைக்கு முன்னதாக அவர் 90 நாட்கள் மிக மோசமான சூழலில் தடுப்பு முகாமில் தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டார்.
எனினும் நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையி;ல் வைக்கப்பட்டுள்ள உண்மைகளின் படி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்ககூடிய அளவிற்கு எந்த குற்றங்களும் வெளிப்படுத்தப்படவில்லை.
உண்மை இவ்வாறிருக்கும் போது சில அரசியல் அதிகாரிகளும் மற்றும் சில உயர் பொலிஸ் அதிகாரிகளும் வசந்த முதலிகேயின் தனி மனித உரிமையை மீறும் அவரை பூசா தடுப்பு முகாமிற்கு மாற்றுவதற்கு முயற்சித்துள்ளனர் என அறிய முடிகின்றது.
பூசா தடுப்பு முகாமானது போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதளஉலக செயற்பாடுகள் போன்ற பாரிய குற்றங்களுடன் தொடர்புடையவர்களை தடுத்துவைக்கும் சிறைச்சாலை ஆகும்.
இவ்வாறு மாற்றுவதன் மூலம் வசந்த முதலிகேயின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதே சம்மந்தப்பட்ட தரப்பினரின் நோக்கம் என தெரியவந்துள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்கமைய வசந்த முதலிகெ சிறைச்சாலையின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அவர் எங்கு தடுத்துவைக்கப்படவேண்டும் என்பதை தீர்மானம் படைத்த அதிகாரிகள் என்ற வகையில் நீங்கள் இவ்வாறான அநீதியான தீர்மனங்களிற்கு இடமளிக்க கூடாது.
மேலும் வசந்த முதலிகேயின் உயிரை பாதுகாக்கும் முகமாக கொழும்பு சிறைச்சாலையிலேயே உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் எமக்கு தெரிந்தளவில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மேலும் பல நபர்கள் உங்கள் அதிகாரத்தின் கீழ் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்இஅவர்களில் சிலருக்கு இதுவரை குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படவில்லை. இவ்வாறான அநீதியான தடுத்துவைத்தல் தொடர்பாக நீதிமன்றங்களிற்கு அதிகாரமுடைய அமைப்புகளிற்கு தெரியப்படுத்தவேண்டும் இந்த நாட்டின் சாதாரண குடிமக்களாக அவர்களிற்கு உள்ள உரிமைகளை அனுபவிப்பதற்கான சுதந்திரத்தை பெற்றுதரவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.