அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, கல்வௌ சிறிதம்ம தேரர் மற்றும் ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க ஆகிய மூவரையும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்புக் காவலில்வைத்து விசாரிப்பதற்கான உத்தரவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று கையெழுத்திட்டுள்ளார்.
மேற்குறிப்பிட்ட மூவரையும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்களுக்குத் தடுத்துவைத்து விசாரிப்பதற்கு விசாரணையாளர்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் விண்ணப்பம் செய்திருந்த நிலையிலேயே, பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் அதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, மோட்டார் சைக்கிளில் பயணிக்கும்போது ஐந்து லாம்பு சந்தியில்வைத்துக் கைதுசெய்யப்பட்டதுடன் அவரோடு ஒன்றாகப் பயணித்த ஹஷாந்த ஜீவந்த குணத்திலக ஆகியோர் கடந்த 18 ஆம் திகதி முதல் பயங்கரவாதத்தடை சட்டத்தின் விதிவிதானங்கள் பிரகாரம், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் அனுமதியின் கீழான 72 மணிநேரத் தடுப்புக்காவலின் கீழ், பேலியகொட பொலிஸ் நிலையக் கட்டடத்தில் தடுத்துவைக்கப்பட்டு களனி வலய குற்றவிசாரணை பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வந்தனர்.
கல்வெவ சிறிதம்ம தேரர் தலங்கம பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த மூவர் குறித்த விசாரணைகளையும் உடனடியாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கையளிக்குமாறு பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன நேற்று (21) ஆலோசனை வழங்கியிருந்தார்.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கடந்த 18 ஆம் திகதி மாலை கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பட்டத்தின் போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் 19 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். முறையற்ற விதத்தில் ஒன்றுகூடிய குற்றச்சாட்டில் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இதில் வசந்த முதலிகே, கல்வௌ சிறிதம்ம தேரர் மற்றும் ஹஷாந்த ஜீவந்த குணதிலக ஆகியோரும் உள்ளடங்கும் நிலையில் அந்த மூன்று பேருக்கு எதிராக மட்டும் பயங்கரவாத்தடைச்சட்டத்தின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்ப்ட்டமை குறிப்பிடத்தக்கது