வடக்கு-கிழக்கு பகுதிகளில் உள்ள விகாரைகளில் கை வைப்போரின் தலையை எடுப்பேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரித்துள்ளார்.
களனியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் வழங்கப்பட்ட தகவலுக்கமைய மேலும் கூறுகையில்,“ யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள், எமக்கு இந்த பகுதி வேண்டும் என கூறுகின்றனர். கிழக்கில் உள்ளவர்கள் எமக்கு இந்த பகுதி வேண்டும் என கூறுகின்றனர்.தெற்கிலுள்ளவர்கள் எமக்கு இந்த பகுதி வேண்டும் என கூறுகின்றனர்.
இங்கு பகுதி பகுதியாக ஒன்றும் இல்லை.இது எமது தாய்நாடு.அதற்கான உறுதிப்பத்திரம் எம்மிடமே உள்ளது. நீங்கள் விரும்பினால் எங்களுடன் சமாதானமாக நல்லிணக்கத்துடன் வாழ முடியும்.
மேலும் வடக்கிலுள்ள தமிழ் கட்சிகளின் தலைவர்களுக்கு நான் ஒன்றைக் கூறுகின்றேன். பிரபாகரனின் பகையை வைத்துக்கொள்ள வேண்டாம். பிரபாகரன் ஆட்கொலை செய்தார். இந்த நாட்டின் இராணுவத்தினர், பொலிஸார் கொன்று குவித்தார். அவர்களின் குடும்பங்கள் கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளது. அந்த பகை இன்றும் உள்ளது. இன்றும் புலம்பெயர் நாடுகளில் இருக்கின்றனர்.
குறிப்பாக ஜனாதிபதிக்கு நான் மிகவும் மரியாதையுடன் ஒன்றைக் கூறுகின்றேன். இந்த நாட்டிலுள்ள வளங்களை புலம்பெயர்ந்தவர்களுக்கு விற்பனை செய்ய முயற்சித்தால், வீதிக்கு இறங்குங்கள் என களனி மக்களுக்கு கூறுகின்றேன்.
மேலும் இந்த கூட்டத்தின் பின்னர் நான் வடக்கு கிழக்கிற்கு வருவேன். நீங்கள் விகாரைகள் மீது கை வைக்க வந்தால், நீங்கள் மகாநாயக்கர்கள் மீது கை வைக்க வந்தால், நான் வெறுமனே களனிக்கு வர மாட்டேன். உங்களின் தலையை எடுத்துக்கொண்டு தான், களனிக்கு மீண்டும் வருவேன். எனக்கு பணியாற்றுவதற்கு அமைச்சு பதவிகள் தேவையில்லை.
ஜனாதிபதி அவர்களே, நீங்கள் மீண்டும் நாட்டின் ஜனாதிபதி ஆக வேண்டுமாயின், ராஜபக்ச திருடர்களை பிடியுங்கள், இந்த நாட்டின் திருடர்கள், தரகு பெறுவோர் விரட்டி அடிக்கப்பட வேண்டும்.
அனுராதபுர மாவட்டத்தில் உள்ள இடங்களில் 6 வீதமானவை, பசில் ராஜபக்ச என்ற தரகுதாரர், யாருக்கு கொடுத்தார். இன்று மக்களுக்கு மின்சாரம் இல்லை. விவசாயம் அழிவடைந்துள்ளது, குடிநீர் கட்டணங்கள் உயர்வடைந்துள்ளன.
இதேவேளை நுவரெலியாவில் மகிந்த ராஜபக்ச, கிரிக்கெட் விளையாடுகின்றார். ராஜபக்ச குடும்பத்தினர் கிரிக்கெட் விளையாடுகின்றனர். கிரிக்கெட் விளையாடும் நேரமா இது? 13ஐ வழங்குவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். சிலர் அதனை வேண்டாம் என்கின்றனர்.
அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவோருக்கு நான் ஒன்றை கூறுகின்றேன். நாம் ஜனாதிபதி தேர்தல் முறையை மாற்றி அமைப்போம் என உச்ச நீதிமன்றத்திற்கு சென்று வாக்குறுதி எடுங்கள்.”- என கூறியுள்ளார்.