வடக்கு கிழக்கில் விகாரைகள் அமைக்கக் கூடாது என எந்த சட்டத்தில் இருக்கிறது? என்ற கேள்வியை தொல்லியல் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஊடகங்களில் முன் வைத்துள்ளார் அத்துடன் இலங்கை முழுவதும் இந்து ஆலயங்கள் இருக்குமாயின் ஏன் வடக்கு கிழக்கில் விகாரைகள் அமைக்க முடியாது என்ற கேள்வியையும் கேட்டுள்ளார்.
பௌத்த விகாரை தேவநம்பியதீசனால் இலங்கையில் அமைக்கப்படுவதற்கு முன்னர் இலங்கையின் ஐந்து திசைகளிலும் பஞ்ச ஈச்சரங்கள் அமைந்திருந்ததுடன் அனுராதபுரம் பொலநறுவை கதிர்காமம் போன்ற அனைத்து இடங்களிலும் சைவ ஆலயங்கள் அமைந்திருந்தன அத்துடன் இலங்கையின் சகல பாகத்திலும் அமைந்துள்ள இந்து ஆலயங்கள் சட்டரீதியாகவே அமைக்கப்பட்டுள்ளன நாட்டின் சட்டத்துக்கு முரணாகவோ அல்லது நீதிமன்ற கட்டளைகளை அவமதித்தோ கட்டப்பவில்லை என்பதை அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிற்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றோம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் சட்டவிரோத விகாரைகள் அமைப்பதை நிறுத்துமாறும் தொல்லியல் என்ற போர்வையில் தமிழர்களின் பூர்வீக அடையாளங்களை சிங்கள பௌத்த அடையாளங்களாக மாற்றுவதை நிறுத்துமாறும் தமிழ் அரசியல்வாதிகள் மாத்திரமல்ல ஒவ்வொரு பிரதேச மக்களும் எதிர்க்கின்றனர் அத்துடன் அதனை ஒரு அநீதியாக பார்க்கின்றனர் என்பதை அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும் நாட்டின் அனைத்து மக்களின் உரிமைகளுக்கும் ஆன தொல்லியல் திணைக்களத்தை இனவாத ரீதியாக ஒருதலைப் பட்சமாக வழி நடாத்துவதை ஐனநாயகம் என்ற பெயரில் நடைபெறும் அராஐயகமாகத் தான் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் பார்க்கின்றனர்.
சட்டம் பற்றி பேசும் அமைச்சரே குருந்தூரில் நடந்தது சட்டமா? இந்த நாட்டின் நீதிமன்றம் சட்டவிரோத கட்டடம் என கட்டளை வழங்கிய பின்னரும் அதனை கையில் எடுத்து உங்கள் அமைச்சு கட்டி முடித்து என்ன? சட்டரீதியான செயற்பாடா? நீங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும் காரணம் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய உங்கள் அமைச்சும் திணைக்களமும் நீதிமன்ற கட்டளையை அவமதித்தமை தொடர்பில்.