வடக்கு கிழக்கில் சீனர்களின் ஆதிக்கம் இந்தியாவை பாதிக்கும் -ரெலோ செயலாளர் ஜனா எம்.பி

இந்தியாவின் பகையினை சம்பாதிக்ககூடிய நிலையினையே தற்போதைய அரசாங்கம் ஏற்படுத்தி வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில்,

கேள்வி:தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டதன் பின்புலம் என்னவாக இருக்கும் என்று கருதுகின்றீர்கள்?

பதில் :கடந்த பொசன் விடுமுறையின் போது ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு அளிக்கப்பட்ட சில கைதிகள் விடுதலை செய்யப்பட்டார்கள். அதிலே தமிழ் அரசியற் கைதிகள் பதினாறு பேர் விடுதலை செய்யப்பட்டார்கள். இந்த அரசியற் கைதிகள் விடுதலைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதியுடனான சந்திப்பு பிற்போடப்பட்டமைக்கும் தொடர்பிருக்கலாம் என்றே நான் கருதுகின்றேன்.

ஏனெனில் இலங்கைக்கு மேற்குலக நாடுகளில் இருந்து பலவிதமான அழுத்தங்கள் வந்து கொண்டிருக்கின்றது. காரணம் இலங்கை அரசு சீனாவை முற்றுமுழுதாக நம்பி சீனாவின் வழித்தடத்தில், சீனாவின் ஒரு மாகாணம் போன்று செயற்படுவது. மேற்குலக நாடுகளுக்கோ, இந்தியாவிற்கோ விரும்பத்தகாத செயலாகவே பார்க்கப்படுகின்றது.

அந்த அடிப்படையில் அமெரிக்க காங்கிரஸில் இலங்கைக்கு எதிரான, தமிழ் மக்களுக்கு சாதகமான வடக்கு கிழக்கு தமிழர் தாயகமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற பிரேரணை முன்மொழியப்பட்டிருக்கின்றது. அதற்கு மேலதிகமாக ஐரோப்பிய பாராளுமன்றத்திலே இலங்கையில் இருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற பிரேரணை 628 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியிருக்கின்றது. பங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கவில்லை என்றால் ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்ற விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான அழுத்தங்களின் காரணமாக இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என கடந்த 22ம் திகதி நாமல் ராஜபக்ஷ அவர்களினால் பாராளுமன்றத்திலே தெரிவிக்கப்பட்டிருந்தது. இது உண்மையிலேயே சம்மந்தம் இல்லாத அமைச்சரினால் சொல்லப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் சொல்ல வேண்டியதை இளைஞர் விளையாட்டு அமைச்சர் அறிக்கையாக விட்டிருந்தார்.

இதற்கிடையில்தான் கடந்த 16ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டு அது பிற்போடப்பட்டது. 22ம் திகதி பாராளுமன்றத்தில் அரசியற் கைதிகளின் விடுதலை சம்மந்தமாக அமைச்சர் பேசுகின்றார். 24ம் திகதி அரசியற் கைதிகளின் விடுதலை இடம்பெறுகின்றது என்றால் இரண்டு நாட்களுக்குள் அந்த அரசியற் கைதிகளின் விபரங்கள், யார் யார் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற விபரங்கள் சேகரித்திருக்க முடியுமா?

கடந்த காலங்களிலே ஒட்டுமொத்தமாக பயங்கரவாதத் தடைச்சட்த்தீன் கீழ் சமூகவளைத்தளங்களில் பதவிடடார்கள், முள்ளவாய்க்காலில் விளக்கேற்றினார்கள் என்பதற்காகக் கைது செய்யபப்பட்டவர்களைத் தவிர நீண்டகாலமாக அரசியற் கைதிகளாக 93 பேர் சிறைக்கைதிகளாக இருக்கும் போது அதில் 16 பேரைத் தெரிவு செய்திருக்க முடியாது என்பது எனது கருத்து.

இவ்வாறு விடுதலை செய்யப்படும் அரசியற் கைதிகளின் தெரிவு 16ம் திகதி கூட்டமைப்பின் சந்திப்பிற்கு முன்னமே இடம்பெற்றிருக்க வேண்டும். பெயரளவிலே 22அம் திகதி பாராளுமன்றத்தில் அறிக்கை விட்டு 24ம் திகதி அவர்களை விடுதலை செய்திருக்க வேண்டும்.

எனவேதான் 16ம் திகதி ஜனாதிபதி கூட்டமைப்பினைச் சந்தித்த பின்னர் இந்தக் கைதிகளின் விடுதலை நடைபெற்றிருந்தால் கூட்டமைப்பின் பேச்சுவார்த்தையின் நிமித்தம், கூட்டமைப்பின் அழுத்தத்தின் காரணமாக இந்தக் கைதிகள் விடுதலையானார்கள் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படும். அதனால் கூட்டமைப்பிற்கு அரசியல் ரீதியாகச் செல்வாக்கு உயரலாம் என்ற காரணத்தினால் தான் கூட்டமைப்புடனான சந்திப்பினைப் பிற்போட்டு அரசியற் கைதிகளில் விடுதலையின் பின்னர் ஒரு திகதி வழங்க ஜனாதிபதி முற்பட்டிருக்கின்றார் என்று கருதுகின்றேன்.

கேள்வி :திஸ்ஸமகராம வாவி துப்பரவுப் பணியில் ஈடுபடும் சீனர்கள் சீன இராணுவ உடைக்கு ஒப்பான உடையணித்திருந்தமை தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட அரசாங்கத்தின் கருத்து தொடர்பில் தங்களின் நிலைப்பாடு?

பதில் :தற்போது பேசுபொருளாக இந்த நாட்டிலே இருப்பதும், இந்த நாட்டைப் படுகுழிக்குள் தள்ளுவதுமான ஒரு வேலைத்திட்டமாகத்தான் சீனர்களின் வருகையும் அதையொட்டி பல பிரதேசங்களில் அவர்களது வேலைத்திட்டங்களும் இடம்பெறுகின்றன. திஸ்ஸவாவி தற்போது தூர்வாரப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அந்த வேலைத்திட்டத்திலே சீனர்கள் பங்குபெறுகின்றார்கள் சீன இராணுவத்தின் உடையை ஒட்டிய சீருடைகள் அவர்களால் பாவிக்கப்பட்டிருப்பதாக பல ஊடகங்களில் பல பிரமுகர்களும் அறிக்கை விட்டிருக்கின்றார்கள்.

நேரடியாக நாங்களும் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. பாதுகாப்புச் செயலாளரும் சீனத் துதரகத்துடன் இது தொடர்பில் பேசியிருப்பதாகவும், அவர்கள் இரணுவத்தினர் இல்லை, இராணுவத்தின் உடையை ஒத்த உடையை அணித்திருக்கின்றார்கள் என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக பாதுகாப்புச் செயலாளர் இனிமேல் அந்தச் சீருடை அணியக் கூடாது என்று சொல்லியிருக்கின்றார்.

இதிலிருந்து ஒன்று புலப்படுகின்றது. அவர்கள் ஏதொவொரு வகையிலான சீருடையை அணிந்திருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் சீன இராணுவத்தினராகவும் இருக்கலாம் எனவும் எண்ணத் தோணுகின்றது.

இந்த நாட்டிலே பிறந்து வளர்ந்து இந்த நாட்டின் மூத்த குடிகளான தமிழ்க் குடிகள் வடக்கு கிழக்கிலே வாழ்ந்து கொண்டிருக்கும் போது யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் அவர்கள் மாநகரசபை எல்லைக்குள் வாகன போக்குவரத்து காவல் நிமித்தம் புலிகளின் சீருடையுடன் ஒத்த சீருடையினை அறிமுகப்படுத்தினார் என்பதற்காக மேயராக இருந்தும் அவர் கைது செய்யப்பட்டார். அதுபோல் அந்த ஊழியர்களும் கைது செய்யப்பட்டு நான்காம் மாடிவரை விசாரணைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள்.

ஆனால் நமது நாட்டில் சீன இராணுவ சீருடைக்கு ஒப்பான சீருடை அணிந்திருந்தவர்களுக்கோ அல்லது அவர்கள் வேலை செய்யும் அந்த வேலைத்தளத்தின் மேலதிகாரிகளுக்கோ எந்தவித விசாரணையும் இல்லை, கேள்வியும் இல்லை. இந்த நாட்டில் சட்டங்கள் எவ்வாறெல்லாம் அமுல்ப்படுத்தப்படுகின்றது.

இவற்றைப் பார்க்கும் போது சீனர்களுக்கு எந்தளவிற்கு இந்த அரசு முக்கியத்துவம் கொடுக்கின்றது என்பதற்கும் மேலாக தெற்கிலே அம்பாந்தோட்டையிலே தொடங்கி திஸ்ஸமகாராம வாவியிலே தூர்வாரி கொழும்பு துறைமுக நகரத்தை முற்றுழுதாகக் கொடுத்து, கொழும்பில் இருக்கும் தொண்மை வாய்ந்த கட்டிடங்கள், யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மாளிகையாகக் கட்டப்பட்ட கட்டிடம் போன்றனவற்றை ஏலம் போட்டுக் கொண்டிருக்கும் போது வடக்கு கிழக்கிலே வாழ்வாதாரத்தை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் வேலையையும் கூட சீனர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

கிளிநொச்சி கௌதாரிமுனையிலே சீனர்களினால் கடலட்டை பண்ணையொன்று நடாத்தப்படுகின்றது. அதனை நேரில் சென்று எமது அரசியல் பிரதிநிதிகள், பொதுமக்கள் பார்த்திருக்கின்றார்கள். மேலும் வடபகுதி கடல்களிலே கடலட்டை பண்ணைகள் நிறுவ இருப்பதாகவும் நாங்கள் அறிகின்றோம். இவற்றையெல்லாம் பார்க்கும் போது ஒட்டுமொத்த நாட்டையே சீனர்களுக்கு கொடுக்கும் ஒரு நிலைமை உருவாகிக் கொண்டிருக்கின்றது. இது இந்த நாட்டை ஒரு அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்லும்.

நிச்சயமாக வடக்கு கிழக்கிலே சீனர்களின் ஆதிக்கத்திற்கு இந்த அரசாங்கம் இடம்கொடுக்கின்றது என்றால் அது நேரடியாக இந்தியாவின் பாதுகாப்பைப் பாதிக்கும் என்ற அடிப்படையில் நேரடியாக இந்தியாவின் பகையையும் சம்பாதிக்க கூடிய ஒரு நிலையைத் தான் இந்த அரசு ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.

கேள்வி :வடக்கில் சீனாவின் ஆதிக்கம் மிகக் கூடுதலாக இருக்கின்றது. இது தொடர்பில் இந்தியா மௌனமாக இருக்கின்றது. இந்த விடயத்தை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில் :இந்தியா இதுவரைக்கும் நேரடியாக இலங்கையுடன் மோதவேண்டுமென்ற நிலைப்பாட்டில் இல்லையென்று நான் நினைக்கின்றேன். இலங்கையின் மூத்த இராஜதந்திரியான கயான் ஜயதிலக, இலங்கையில் சீனர்களின் ஆதிக்கத்தை இந்தியா உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். இதற்காக இந்தியா ஒரு விசேட தூதுவரை நியமிக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றார்.

எனது பார்வையில் அமெரிக்க காங்கிரஸில் கொண்டு வரப்பட்ட பிரேரணையாக இருந்தாலும் சரி ஐரோப்பிய பாராளுமன்றத்திலே பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிரான பிரேரணையாக இருந்தாலும் சரி அவை இந்தியாவின் பின்புலத்தில்தான் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும் என்பதற்கும் மேலாக இலங்கைக்கு அவ்வப்போது சில செய்திகளையும் இந்தியா சொல்லிக் கொண்டிருக்கின்றது.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் எரிந்து கொண்டிருந்த நேரம் இந்தியாவிடம் உதவி கேட்டிருந்தார்கள். அந்தக் கப்பல் எரியத் தொடங்கி ஐந்து நாட்களின் பின்புதான் இந்தியா உதவிக்கு வந்தது. ஒன்றரை நாட்களுக்குள் அந்தத் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்தியாவுடன் இலங்கை உண்மையான நட்பைப் பேணியிருந்தால் இந்தக் கடல்வளம் இந்தளவிற்கு அழிந்திருக்காது. அதனை இந்தியா செயல்முறையிலே காட்டியிருக்கின்றது.

ஏனெனில் ஒருமுறை கிழக்குக் கடற்பரைப்பில் சங்கமன்கண்டிக்கு மேலே ஒரு கப்பல் தீப்பற்றி எரிந்த போது இந்தியாவிடயம் உதவி கேட்க உடனடியாக இந்தியா வந்து அந்தத் தீப்பரவலைக் கட்டுப்பாட்டிருற்குள் கொண்டு வந்து கடல்வளத்தைப் பாதுகாத்தது. தூரத்துத் தண்ணீர் ஆபத்திற்குதவாது என்பது இதைதத்தான்.

இலங்கை சீனர்களை நம்பியிருக்கும் போது எதிர்காலத்திலும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறும் போது இந்தியா பார்த்துக் கொண்டிருக்கும் நிலை உருவாகலாம். ஏனெனில் 1971ம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா ஆட்சிக் காலத்தில் ஜே.வி.பி கிளர்ச்சியானது இந்தியாவினால்தான் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதேபோன்று உண்மையைச் சொல்லப் போனால் இந்தியாவின் உதவியில்லாமல் தமிழீழ விடுதலைப் புலிகளை இலங்கையினால் தோற்கடித்திருக்கவும் முடியாது.

இவற்றையெல்லாம் மறந்துதான் இன்று இலங்கை அரசு இந்தியாவிற்கு எதிராக சீனாவை இந்த நாட்டுக்குள் உள்வாங்கி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதனை இந்தியா பார்த்துக் கொண்டிருக்கின்றது என்று சொல்ல முடிhது உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது எனலாம். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது. சிலவேளைகளில் அது வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்குச் சாதகமாகக் கூட இருக்கலாம்.

கேள்வி :இந்தியத் தூதுவருடன் தமிழத் தேசியக் கூட்டமைப்பு சந்தித்த போது சீன ஆக்கிரிப்பு தொடர்பில் ஏதும் பேச்சுகள் இடம்பெற்றதா?

பதில்:வெளிப்படையாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இந்தப் பேச்சுக்ள் நடைபெற்றதாக நான் அறியவில்லை. இந்திய தூதுவருடன் நடைபெற்ற பேச்சுகளில் 13வது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்ப்படுத்தப்பட வேண்டும், இலங்கையில் தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும் அதற்குத் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒற்றுமையாக, ஒரே குரலாக ஒலிக்க வேண்டும் போன்ற விடயங்கள் தான் பேசப்பட்டன.

கேள்வி :வடக்கு கிழக்கில் உள்ள வளங்களை அரசாங்கம் சீனாவுக்கு வழங்குவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிற்கு ஏதும் முறைப்பாடுகள் செய்துள்ளதா?

பதில் :இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முறைப்பாடு செய்ய வேண்டிய தேவை இல்லை. தமிழ் மக்களின் வளங்கள் சூரையாடப்பட்டு, தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டால் அவை தொடர்பில் நாங்கள் வெளியுலகிற்குக் கொண்டு வருவோம். பேச வேண்டிய இடங்களில் பேசுவோம்.இந்த விடயத்தில் எங்களையும் விட இந்தியா மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்துக் கொண்டிருக்கும் என்பது யாவரும் அறிந்த விடயம்.

கேள்வி :சேதனப் பசளைத் திட்டம் தெடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில் :சேதனப்பசளைத் திட்டமென்பது என்னைப் பொருத்தவரையில் வரவேற்கத்தக்கது. ஏனெனில் நஞ்சற்ற உணவுகளுக்குப் போக வேண்டிய தேவை இருக்கின்றது. வெளிநாடுகளிலும் இந்த விடயங்கள் கையாளப்படுகின்றன. சேதனப்பசளை முறைமைக்கு நாங்கள் மாற வேண்டும். ஆனால் அந்த சேதனப்பசளை பூரணமாக எங்களுக்குக் கிடைக்க வேண்டும். அத்துடன், சரியான வழிகாட்டலின் மூலமாக விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.

ஆனால், திடீரென இரசாயணப் பசளை இறக்குமதியை நிறுத்தியமையால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்தப் போகத்திற்கு இரசாயணப் பசளை கிடைக்கும் என்று அரசாங்கம் கூறினாலும் அதனைப் பதுக்கி வைத்திருப்பவர்கள் இரண்டு, மூன்று மடங்கு விலையில் விற்றுக் கொண்டிருக்கின்றார்கள். சேதனப்பசளை முறைமைக்கு மக்களைக் கொண்டுவந்துவிட்டு இந்த அரசாங்கம் இரசாயணப் பசளையை நிறுத்தியிருக்கலாம். அதற்குரிய தன்னிறைவு அடையாமல் இரசாயணப் பசளையை நிறுத்தியமையானது ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.

அது மாத்திரமல்லாமல் பல பொருட்களின் இறக்குமதியைக் கூட இந்த அரசாங்கம் நிறுத்தியிருக்கின்றது. இங்கு உற்பத்தி செய்யப்படாத, மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்குரிய பொருட்களின் இறக்குமதிகள் நிறுத்தியமையால் மக்கள் அதிகம் கஸ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

முன்னெச்சரிக்கை இல்லாமல், எமது மக்களை வளப்டுத்தாமல், சேதனப்பசளை முறைமைக்கு மாற்றாமல் தன்னிச்சையாக இந்த இரசாயணப் பசளையை நிறுத்தியது ஒரு முட்டாள்தனமான செயல். அதனைப் படிப்படியாகச் செய்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் மக்கள் இந்தளவிற்குத் துன்பப்பட்டிருக்க மாட்டார்கள்.

மக்களை படுகுழியில் தள்ளுகின்ற வேலையைத் தான் இந்த அரசாங்கம் தொடர்ச்சியாகச் செய்கின்றது. கொவிட் பாதிப்பு ஒருபக்கம், எரிபொருள் விலையேற்றம் ஒருபுறம், பசளையற்ற விசாயிகளின் பாதிப்பு ஒருபக்கம், மீனவர்களின் பிரச்சினை ஒருபுறம் என மக்களை துன்புறுத்திக் கொண்டு வருகின்றது.

கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் இந்த நாட்டை வளப்படுத்துவதற்காக, தன்னை ஒரு அரசனாகச் சித்தரித்து நாட்டு மக்களைக் காப்பாற்ற வந்த பிதாமகராகக் கூறிக் கொண்டு இந்த ஆட்சியைக் கைப்பற்றியவர். இன்று அத்தனை மக்களின் சாபக்கேட்டுக்கும் உள்ளான ஒரு மனிதராக மாறியிருக்கின்றார்.