வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு செயற்பாடுகள் விரைவில் நிறைவு செய்யப்பட வேண்டும் என்றும் காதர் மஸ்தான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 01 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாடு முகம் கொடுத்துள்ள நெருக்கடியான காலகட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள சிறந்த வரவு செலவுத் திட்டமாக இந்த வரவு செலவு திட்டத்தை குறிப்பிட முடியும். மனிதநேய உதவிகள் தேவைப்படும் அனைவருக்கும் அதனை பெற்றுக் கொடுக்க இதன் மூலம் வழி வகுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 30 வருட யுத்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு ,கிழக்கு மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு நடவடிக்கைகள் இன்னும் முற்றுப்பெறாமலே உள்ளன. இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் அவை நிறைவு செய்யப்பட வேண்டும் என நான் கேட்டுக் கொள்கின்றேன்.
வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் சுகாதாரம், கல்வி,வீதி, நீர் வினியோகம் போன்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கு 36 ஆயிரத்து 100 மில்லியன் ரூபாய் தேவை என சம்பந்தப்பட்ட அரசாங்க அதிபர்கள் தெரிவித்துள்ளனர். அந்த நிதி வழங்கப்பட்டு விரைவில் அந்த நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட வேண்டும்.
அது தொடர்பாக நாம் ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். கட்டம் கட்டமாக அதனை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி யளிக்கப்பட்டுள்ளது என்றார்.