முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் கிழக்கு வட்டுவாகல் கிராமத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் உள்ளடங்கலான 617 ஏக்கர் கோட்டாபய கடற்படை தளத்தை விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் 29/07/2021 சுவீகரிக்க நில அளவைத் திணைக்களம் மக்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதனை தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்றினைய வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
2017 , 2018 ஆம் ஆண்டுகளில் அபகரிக்கும் முயற்சி நடைபெற்றது ஆனால் மக்களின் பாரிய எதிர்ப்பு காரணமாக தடைப்பட்டது ஆனால் போராட்டத்தில் பங்கு பற்றியவர்களுக்கு நீதி மன்ற வழக்கு தொடர்கிறது.
2017/08/04 திகதியிடப்பட்ட 2030/44 வர்த்தமானியில் 271,6249 ஹொக்டெயர் நிலத்தை வட்டுவாகல் பிரதேசத்தில் சுவீகரிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வட்டுவாகல் பகுதியில் அபகரிக்க முயற்சிக்கும் காணிகளுக்கு அப்பால் அந்த மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கடற்தொழில் , விவசாயம் போன்றனவும் பாரிய அளவில் அபகரிப்படவுள்ளன. யுத்தத்தால் பாரிய அழிவை சந்தித்த மக்களின் மீள் வாழ்வை வளம்படுத்துவதை விட்டு இருப்பதையும் பறிக்கும் செயல் தமிழர்களின் இருப்பை இல்லாதொழிக்கும் நடவடிக்கை. எதிர்காலத்தில் பாரிய சிங்கள கடற்படைக் குடியிருப்பு உருவாக்கப்படுவதற்கான இராணுவத் திட்டம் என்பது மறுப்பதற்கில்லை.