சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரிகள் நாளை செவ்வாய்க்கிழமை, இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்திக்கின்றனர்.
இதன்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் பொருளாதாரத்துக்கான மதிப்பீடுகள் குறித்து அவர்கள் கோட்டாபயவிடம் விளக்கமளிப்பார்கள் என்று சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கையின் தலைமையாளர் மசாக்கிரோ நொசாக்கியை கோடிட்டு, ரொயட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் இதுவரை இலங்கைக்கான நிதியுதவிகள் குறித்து இலங்கை அரசாங்கத்திடம் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோரிக்கைகள் விடுக்கப்படுமானால் அது குறித்து கலந்துரையாட தமது அதிகாரிகள் தயாராக இருப்பதாகவும் நொசாக்கி தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்துடன் ஏற்கனவே அடுத்த மாதத்தில் திட்டமிடப்பட்டுள்ள வழமையான சந்திப்புக்கு புறம்பாகவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை தற்போது, பாரிய பொருளாதார நெருடிக்கடியை எதிர்கொள்கிறது
நாட்டில் வெளிநாட்டு இருப்பு 2.31 பில்லியன் டொலர்களாக இருக்கும் நிலையில், எரிபொருள், உணவு மற்றும் மருந்துகளின் இறக்குமதிகளை மேற்கொள்வதில் பாரிய சிரமம் எதிர்கொள்ளப்படுகிறது.
ஏற்கனவே இந்த மாத ஆரம்பத்தில் சர்வதேச நாணய நிதியத்தினால் வெளியிடப்பட்ட ஒரு காலமுறை மறுஆய்வில், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் “நம்பகமான மற்றும் ஒத்திசைவான” மூலோபாயத்தை செயல்படுத்துமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.