கொவிட் அச்சுறுத்தல் காரணமாக இன்று இரவு முதல் நாடாளவிய ரீதியில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதையடுத்து அத்தியாவசியப் பொருட் கொள்வனவுக்காக வவுனியா நகருக்கு மக்கள் அதிகளவில் வருகை தந்தனர்.
இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக இன்று பிற்பகல் அரசாங்கத்தின் அறிவித்தல் வெளியாகிய நிலையில், அத்தியாவசிப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வவுனியா நகர வர்த்தக நிலையங்களில் அதிகளவிலான மக்கள் வருகை தந்து முண்டியடித்துக் கொண்டு பொருட்களை கொள்வனவு செய்ததை அவதானிக்கக்கூடியதாய் இருந்தது.
அரசி, மா, சீனி, பால் மா, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், மரக்கறி வகைகள் என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு அதிகளவிலான மக்கள் வர்த்தக நிலையங்களின் முன்னால் நீண்ட வரிசையில் நின்றதுடன், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னாலும் நீண்ட வாசையில் மக்கள் நின்று எரிபொருட்களைப் பெற்றுச் சென்றனர். இதனால் வவுனியா நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.