இன மோதலை உருவாக்கும் திட்டமிட்ட நோக்கத்துடனேயே வடக்கு கிழக்கில் விகாரைகளுக்கும் தொல்பொருள் இடங்களுக்கும் எதிராக தமிழ்த் தேசிய இனவாத அரசியல்வாதிகளும் கடும்போக்குவாதிகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றார்கள் என்ற கடுமையாகச் சாடியிருக்கிறார் இலங்கையின் பௌத்த உயர் பீடங்களில் ஒன்றான அஸ்கிரிய பீட பிரதிப் பதிவாளர் நாரம்பனாவே ஆனந்த தேரர்.
அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இதற்கெதிராக ஒன்றிணைந்து நிற்கும் சிங்கள பௌத்த மக்களால் ஒருநாள் ஏற்படும் பிரச்சினைக்கு இன்றைய ஆட்சியாளர்கள் பொறுப்பு என்றும் அவர் எச்சரித்தார்.
திருகோணமலையில் இருந்து ஆளுநரை மாற்றியிருப்பதும் பெளத்த சிங்கள மக்களுக்கு எதிரான ஆட்சியாளர்களின் செயற்பாடு என்றும் அவர் விமர்சித்தார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:
அண்மைக் காலமாக வடக்கு, கிழக்கில் உள்ள பௌத்த விகாரைகள் மற்றும் தொல்பொருள் இடங்களுக்கு எதிராக கடும் எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இனவாத வெறி பிடித்த சில அரசியல்வாதிகளும் கடும்போக்குவாத அமைப்புகளும் நாட்டில் இனவாத, மதவாத நெருக்கடியை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில் மிகவும் திட்டமிட்டு இந்த இடங்களில் போராட்டம் நடத்தி வருவதாக பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
இது போன்ற மிக அண்மைச் சம்பவம் திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது. தாய்லாந்தில் இருந்து 270 வருடங்களுக்கு முன்னர் பிக்குகள் இலங்கைக்கு வந்திறங்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணத்தை நினைவுகூரும் வகையிலான நிகழ்வுக்காக சியாமியத் துறவிகள் (பிக்குகள்) அங்கு வந்திறங்கினர். தமிழ் இனவாத அமைப்புக்களைச் சேர்ந்த சில பல்கலைக்கழக மாணவர் குழுக்கள் இந்த இடத்திற்கு வந்து கடும் எதிர்ப்பைக் காட்டியிருக்கின்றன.
இந்த நிலமையை இன்றைய ஆட்சியாளர்கள் கட்டுப்படுத்தாவிட்டால் நாட்டில் பாரதூரமான மத மற்றும் தேசிய நெருக்கடி உருவாகுவதைத் தடுக்க முடியாது. இன்று இந்த விடயம் தொடர்பில் தற்போதைய ஆட்சியில் உள்ள எவரும் பேசுவதில்லை. இந்த ஆட்சி ஆளுநர்கள் நியமனத்தில்கூட சிங்கள பௌத்த மக்களுக்குப் பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் தற்போது செயற்படுவதையே நாம் காணமுடிகிறது.
வடக்கு – கிழக்கின் பௌத்த பாரம்பரியம் பாதுகாக்கப்பவேண்டும். அத்துடன், நாடு முழுவதிலும் உள்ள பௌத்தர்களுக்கு மட்டுமன்றி, அனைவரினதும் சமய நல்லிணக்கத்திற்காக ஒன்றிணைந்து செயற்படும் வகையில், இவ்வாறான தீவிரவாத அமைப்புக்கள் மற்றும் அடிப்படைவாத மதக் குழுக்களைக் கட்டுப்படுத்தி ஆட்சியாளர்கள் சட்டத்தை அமுல்படுத்தவேண்டும் என்பதை ஆணித்தரமாக நினைவூட்ட விரும்புகின்றோம். சட்டம் தீவிரமாகச் செயற்படுத்தப்படவேண்டும் இந்தப் பின்னணியில் இந்நாட்டு சிங்கள பௌத்த மக்கள் அனைவரும் இணைந்து தமிழ் இனவாதத்திற்கு எதிராக நிற்கின்றனர். இந்தப் பிரச்சினை தொடர்பில் ஒரு நாள் ஏதாவது நெருக்கடி ஏற்பட்டால் இன்றைய ஆட்சியே அதற்கு நிச்சயமாகப் பொறுப்பு என்றார்