உள்ளூராட்சி மற்றும் மாகாணசபை தேர்தல்களை விகிதாசார முறையில் நடத்துவதற்கு புதிய சட்டமூலம் கொண்டுவந்தால் நாங்கள் அதற்கு பூரண ஆதரவை வழங்குவதற்கு தயார்.
அரசாங்கம் சட்டமூலம் வர தயாரா என எதிர்க்கட்சியின் பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (26) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சு விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கான இருக்கும் தடைகளை நீக்கி, புதிய சட்டமூலம் ஒன்றை கொண்டுவருவதற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மை கடந்த காலத்தில் அரசாங்கத்துக்கு இருந்தது.
ஆனால் அதனை அரசாங்கம் செய்யவில்லை. தற்போது அந்த பெரும்பான்மை இல்லை. அதனால் மாகாணசபை தேர்தலை விகிதாசார முறையில் நடத்துவதற்கு அரசாங்கம் புதிய சட்டமூலம் ஒன்றை கொண்டுவந்தால் அதற்கு பூரண ஆதரவை வழங்குவதற்கு நாங்கள் தயார்.
ஆனால் உள்ளூராட்சி மன்ற தேர்தலை மார்ச் மாதத்துக்கு முன்னர் நடத்தவேண்டும். அதனை பிற்போட்டால் நாங்கள் நீதிமன்றம் செல்வோம்.
அத்துடன் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களில் தற்போது அதிகம் பேசப்படுவது அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதாகும்.
ஆனால் இந்த திருத்தத்துக்கு அன்று ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வாக்களித்தார்கள். யாரும் எதிர்க்கவில்லை.
8ஆயிரமாக இருக்கும் உறுப்பினர்களை 4ஆயிரமாக குறைக்க வேண்டும் என்பதுதான் பிரச்சினை என்றால் அதனை ஒரு சரத்தின் ஊடாக விகிதாசார முறைக்கு மாற்ற முடியும்.
அதன் மூலம் தானாகவே 4ஆயிரமாக மாறும். அதனை நாங்கள் செய்வோம். அதற்கு நாங்கள் ஆதரவு. ஆனால் அரசாங்கத்துக்கு தேவையாக இருப்பது தேர்தலை பிற்போடுவதாகும் என்றார்.
இதற்கு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்குபுர பதிலளிக்கையில், தேர்தலை விகிதாசார முறையில் நடத்துவதற்கு முடியுமான புதிய சட்டமூலம் ஒன்றை கொண்டுவருவோம். வரவு செலவு திட்ட விவாதம் முடிந்ததுடன் அந்த சட்டமூலத்தை பாாரளுமன்றத்துக்கு கொண்டுவருவோம் என்றார்.