ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இன்று விடுதலை செய்யப்பட்ட 16 நபர்கள் குறித்த மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன.
விடுதலையானவர்கள் அனைவரும் நீதிமன்றங்கள் ஊடாக தீர்ப்பு வழங்கப்பட்டு தண்டனை அனுபவித்துவந்தவர்கள் என்றும் விரைவில் அவர்களுக்கான தண்டனைக் காலம் நிறைவடையவுள்ளதாகவும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
விடுதலையான 16 பேரும் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் என்று சில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுவரும் நிலையில் குறித்த தகவலை மறுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பிரதிநிதிகள்,
விடுதலையானவர்களில் மிக அதிகமானவர்கள் போராளிகள் அல்ல என்றும் போராட்டத்திற்காக உதவிய குற்றச்சாட்டில் கைதானவர்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றங்கள் ஊடாக தண்டனை வழங்கப்பட்ட நிலையில் அவர்கள் தண்டனை அனுபவித்து தண்டனைக் காலம் நிறைவடையவுள்ள நிலையிலேயே அவர்கள் விடுதலையாகியிருக்கின்றனர் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இதனிடையே இன்று விடுதலையானவர்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
அவர்கள் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 09 பேரும், மன்னார் மாவட்டத்தினைச் சேர்ந்த ஆறு பேரும் மாத்தளை மாவட்டத்தினைச் சேர்ந்த ஒருவரும் என்று தெரியவந்துள்ளது.
அதன் அடிப்படையில்,
யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த,
நடராஜா சரவணபவன்,
புருஷோத்தமன் அரவிந்தன்,
இராசபல்லவன் தவரூபன்,
இராசதுரை ஜெகன்,
நல்லான் சுவலிங்கம்,
சூரியமூர்த்தி ஜெவோகன்,
சிவப்பிரகாசன் சிவசீலன்,
மயில்வாகனம் மதன்,
சூரியகாந்தி ஜெயச்சந்திரன் ஆகியோரும்,
மன்னார் மாவட்டத்தில்,
சிமோன் சந்தியாகு,
ராகவன் சுரேஷ்,
சிறில் ராசமணி,
சாந்தன் ஸ்ராலின் ரமேஸ்,
கபிறில் எட்வேட் யூலியன் ஆகியோருடன்,
மாத்தளை மாவட்டத்தினைச் சேர்ந்த
விசுவநாதன் ரமேஸ் ஆகியோரே விடுதலையாகியுள்ளனர்.
விடுதலையானவர்களில் 15 பேர் அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்தும் ஒருவர் யாழ். சிறைச்சாலையிலிருந்தும் விடுதலையாகியிருக்கின்றனர்.
யாழ்.சிறைச்சாலையிலிருந்து விடுதலையானவர் 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவர் என்று தெரியவந்துள்ளது.