ஸ்ரீ லங்கன் விமான சேவை, கடந்த வருடம் உகண்டாவில் என்டபே சர்வதேச விமான நிலையத்துக்கு எடுத்து சென்ற 102 டொன் நிறையுடைய காகிதங்கள் , வணிக நோக்கத்தில், சர்வதேச பொருள் பரிமாற்ற நிர்ணயங்களுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட வணிக நடவடிக்கை என ஸ்ரீ லங்கன் விமன சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
உகண்டாவுக்கு, நாட்டிலிருந்த டொலர்கள் கடத்தப்பட்டுள்ளதாக சமூக வளைத் தளங்களில் பரவலான குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையிலேயே, நேற்று ( 14) சிறப்பு ஊடக அறிக்கை ஊடாக ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.
வணிக நடவடிக்கையான குறித்த செயற்பாடு தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புடன் செய்துகொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கு அமைய, அந்த அச்சுப் பிரதிகள் அல்லது அச்சு ஆவணங்கள் என்ன என்பதை வெளிப்படுத்தாமல், ரகசியம் பேணுவதாகவும் குறித்த நிறுவனம் அவ்வறிகையில் சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் தொடர்ச்சியாக இலங்கையிலிருந்து டொலர்களே இவ்வாறு கடத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இவ்வாறான நிலையில், ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றினை இட்டுள்ள ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம், கடந்த 2021 பெர்வரி மாதம் உகண்டாவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 102 டொன் காகிதங்கள் அல்லது அச்சு பிரதிகள், உகண்டா நாட்டின் நாணயத் தாள்கள் என தெரிவித்துள்ளது.
குளோபர் செகியூரிடி பிரின்டர்ஸ் ஊடாக அச்சிடப்பட்ட உகண்டா நாணயத் தாள்களே இவ்வாறு எடுத்துச் செல்லப்பட்டதாக அந்த ட்விட்டர் பதிவில் ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந் நிலையில் கடந்த 2021 பெப்ரவரி மாதத்தின் பின்னர் உகண்டாவின் நாணயத்தின் பெறுமதி நான்கு மடங்காக அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டும் பொருளியல் சார் நிபுணர்கள், அது குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
2021 பெப்ரவரி முதல் ஒரு வருட காலப்பகுதிக்குள் இவ்வாறு உகண்டாவின் நாணயம் சடுதியாக பெறுமதி மிக்கதாக மாறியுள்ளமைக்கும் இந்த பண நோட்டு எடுத்துச் சென்ற விடயத்துக்கும் தொடர்புகள் இருக்கலாம் என சந்தேகங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில், கறுப்புப் பண சுத்திகரிப்பு உள்ளிட்ட சட்ட விரோத நடவடிக்கைகளை தடுக்க உகண்டா போதுமான நடவடிக்கைகளை முன்னெடுக்காமையை காரணம் காட்டி, அந் நாட்டின் நிதித் துறை அல்லது நிதி தொழில்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை எதிர்த்துப் போராடுவதற்கான கொள்கைகளை உருவாக்க ஜீ 7 நாடுகளின் முன்முயற்சியின் பேரில் உலகளாவிய அரசுகளுக்கிடையேயான அமைப்பான Financial Action Task Force (FATF) உருவாக்கப்பட்டதுடன், அதனூடாக உகண்டா கறுப்பு பட்டியலில் சேர்க்கபப்டும் அபாயத்தை எதிர்க்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.